Published : 10 Aug 2023 04:55 PM
Last Updated : 10 Aug 2023 04:55 PM

இந்தியாவின் ‘ஆன்மிகத் தலைநகரம்’ தமிழகம்: தி.மலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

திருவண்ணாமலை: இந்தியாவின் ஆன்மிகத் தலைநகராக தமிழகம் திகழ்கிறது என திருவண்ணாமலையில் நடைபெற்ற சாதுக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக திருவண்ணாமலைக்கு இன்று (ஆகஸ்ட் 10-ம் தேதி) வருகை தந்தார். திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள திருமண மகாலில், சாதுக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “திருவண்ணாமலை ஆன்மிக பூமியாகும். இது சிவபெருமானின் பூமி. நினைத்தாலே முக்கி தரும் பூமியாகும். சிவனின் விருப்பமின்றி எதுவும் நடந்துவிடாது. சாதுக்கள், சன்னியாசிகள் மற்றும் ரிஷிகளால் பாரத நாடு உருவாக்கப்பட்டது. இந்த புண்ணிய பூமியில் கால் வைக்க பெருமைப்படுகிறேன். பிற நாடுகளை போல் நம் பாரத நாடு இல்லை. ஆதிக்க சக்திகள் மூலம் பிற நாடுகள் உருவானது. நமது பாரத நாடு என்பது சாதுக்கள், சன்னியாசிகள், ரிஷிகளின் வலிமையால் உருவாக்கப்பட்டது.

பல அரசாட்சிகள் மூலம் பிளவு பட்டிருந்தாலும், நாம் அனைவரும் ஒன்று. நமது நாடு பாரம்பரிய இலக்கியத்துடன் தொடர்பு கொண்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நமது ரிஷி குலத்தோர் ஞானம் பெற்று, இந்த உலகம் சிவனால் உருவாக்கப்பட்டது, நாம் அனைவரும் சிவனின் குழந்தைகள் என்பதால் ஒன்றாக இருக்க வேண்டும் என உணர்த்தியவர்கள். இப்பிரபஞ்சம், சிவனின் பிரதிபலிப்பாகும். இந்த உண்மையே சனாதன தர்மத்தின் மையாகும். தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே இமாலயா வரை, நாம் அனைவரும் பாரதக் குழந்தைகள்.

சனாதனம் என்பது தனி ஒருவருக்கானதல்ல. பாரதத்தின் குடும்பத்துக்கானது. அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற பரந்த உயர்ந்த கருத்துடையதுதான் சனாதன தர்மமாகும். நான், எனது என்ற குறுகி இல்லாமல் நாம், நமது என்ற பரந்த மனப்பான்மை கொண்டது. குறுகிய மனப்பான்மை கொள்கைகளால், சனாதனம் தர்மம் சில அழிவுகளை சந்திக்க நேர்ந்தது. நமது நாடு 1947-ல் உருவாக்கப்பட்டதல்ல. 1947-ல் விடுதலை மட்டுமே அடைந்தோம். பாரதத்தின் ஆன்மிகத் தலைநகராக தமிழகம் உள்ளது என்பதை தமிழகம் முழுவதும் சுற்றி வந்தபோது புரிந்தது.

அகத்தியர், திருமூலர், பதஞ்சலி, நாயன்மார்கள், ஆழ்வார்கள் அவதரித்து ‘நான் யார்’ என்பதை உணர்ந்து, ஒற்றுமையுடன் இணைந்து வாழ்வதற்கான வழிகளை தெரிவித்துள்ளனர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் தெரிவித்துள்ளார். நான் வேறு, பயிர் வேறு அல்ல, பயிர் வாடிய போது வருந்துகிறேன் என்றார். இது தான் சனாதன தர்மம். நமது நாட்டின் ஆணி வேர் ஆன்மிகத்தை தவிர்த்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வழிபாதைகளை அமைத்தது. ஆன்மிக வளர்ச்சி இல்லாமல் பாரதம் வலிமை பெறாது. உலகலாவிய வளர்ச்சிகளை பின் பற்றினால், நமது நாடு பாரத நாடாக இருக்காது.

மேற்கத்திய நாடுகளின் போலி மாதிரியாகவே இருக்கும். ஆன்மிக எழுச்சி என்பது, நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு மட்டுமின்றி, உலகத்துக்கும் பயன் அளிக்கக் கூடியதாகும். அனைவரும் ஒன்றிணைந்து இனிமையாக வாழ்வை வாழ்வதே பாரதத்தின் குறிக்கோளாகும். இறை சக்தி, இறை ஒளி உலகம் முழுவதும் பரவ வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது அடிப்படை தத்துவம். இதுமட்டுமே உலகத்தை காப்பாற்றும். ஆலயம், ஆசிரமம் என்று இல்லாமல், மக்கள் அனைவரையும் ஆன்மிக ஆற்றல் உள்ளவர்களாக உருவாக்கி, ஆன்மிகத்தை சமுதாயம் முழுவதும் விரிவடைய செய்வது உங்களது கடமையாகும்.

சிவ பெருமானின் பாதையான கிரிவல பாதையில் அசைவ உணவகத்தை அனுமதிக்கக் கூடாது. சகோதரி நிவேதிதாவின் சமூக பணி மற்றும் தொண்டுகளை இந்திய அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்நிகழ்வில் சாதுக்கள், சிவனடியார்கள் மற்றும் ஆன்மிக வாதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சாதுகளுக்கு அன்னதானம் வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x