Published : 10 Aug 2023 04:03 PM
Last Updated : 10 Aug 2023 04:03 PM
மதுரை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு மத்திய அரசு வழங்கும் நிதியில் 90 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்டிஐ தகவல் மூலம் இது தெரியவந்துள்ளது.
மத்திய அரசும் தன் பங்குக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கி வருகிறது. கடந்த 2018-19 முதல் 2022-23 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.3,019,65,00,000 (மூவாயிரத்து பத்தொன்பது கோடியே 65 லட்சம் வரை) நிதி ஒதுக்கியுள்ளது. அதில் கடந்த 2018-19 நிதியாண்டில் மட்டும் ரூ.1,553 கோடி நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக குறைக்கப்பட்டு கடைசியாக கடந்த 2022-23 நிதியாண்டில் வெறும் ரூ.159.78 கோடிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் இந்த தகவல்களை பெற்ற மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக் கூறும்போது, ''தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு மத்திய அரசு கடந்த ஆண்டுகளில் ஒதுக்கிய நிதி விபரங்கள் பற்றி கோரப்பட்ட தகவலுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் அளித்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. 2018-19ம் ஆண்டு ரூ.1,553 கோடி ஒதுக்கிய மத்திய அரசு, 2019-20ம் ஆண்டு 385.51 கோடியும், 2020-21ம் ஆண்டு ரூ.541.29 கோடியும், 2021-22ம் ஆண்டு ரூ.379.59 கோடியும், 2022-23ம் ஆண்டு 159.78 கோடியும் ஒதுக்கியுள்ளது.
மத்திய அரசு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத்திட்ட நிதி ஒதுக்கீட்டை அடியோடு புறக்கணித்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இவ்வாறு நிதி ஒதுக்கீடுகளை தொடர்ந்து குறைத்து வருவதால் மாநிலத்தில் பல வருடங்களாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்காக பிரத்யேகமாக வழக்கத்தில் இருந்து வந்த கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுப் பணிகள் பாதியிலேயே முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017-18 முதல் 2021-22 நிதியாண்டுகள் வரை தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கிய நிதியில் ரூ.927 கோடிகள் பயன்படுத்தாமல் அரசு கஜானாவிற்கு திருப்பி அனுப்பிய விவகாரம் அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது மத்திய அரசின் நிதியும் 90 சதவீதம் வரை குறைக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் வாழும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இம்மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சிகளில் பெறும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நல நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ.1,500 கோடிகளுக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தமிழக முதல்வர் மத்திய அரசிற்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நல நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதி சிறப்புக் கவனம் பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT