Published : 10 Aug 2023 03:32 PM
Last Updated : 10 Aug 2023 03:32 PM

கடலூர் கிராமங்களில் நீர், நிலம் மாசுபாடு: என்எல்சி பதிலளிக்க தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: கடலூர் மாவட்ட சூழலியல் குறித்து பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரித்த தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம், NLC நிர்வாகம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நேற்று முன்தினம் “மின்சாரத்தின் இருண்ட முகம்” என்கிற ஆய்வறிக்கையை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையத்தால் அதனை சுற்றியுள்ள 8 கி.மீ பரப்பளவுக்கு உள்ள கிராமங்களில் நீர், நிலம் மாசுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து செய்தி நிறுவனங்களில் ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு தாமாக முன்வந்து(suo moto) வியாழக்கிழமை வழக்காக விசாரித்தது. விசாரணையில், இதுகுறித்து NLC நிர்வாகம், மத்திய, மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியங்கள், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை செயலாளர், தமிழ்நாடு குடிநீர் வாரியம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட தொடர்புடைய அமைப்புகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ஆய்வு சொல்வது என்ன? - ‘மண் மற்றும் நிலத்தடி நீரின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்ட 31 இடங்களில் 17 இடங்களில் நிலத்தடி நீரின் தரம் மிகக் கடுமையாகவும், 11 இடங்களில் குறிப்பிடத்தக்க அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு வெள்ளூர் என்ற கிராமத்தில் நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 250 மடங்கு அதிகமாக பாதரசம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆய்வு நடத்தப்பட்ட 90% வீடுகளில் உள்ளவர்களில் எவரேனும் ஒருவருக்கு சிறுநீரகம் தோல் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது உறுதியாகியுள்ளது’ என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x