Published : 10 Aug 2023 12:11 PM
Last Updated : 10 Aug 2023 12:11 PM

எம்எம்டிஏ பயங்கரம் | சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அன்புமணி வலியுறுத்தல்

சென்னை அரும்பாக்கத்தில் பள்ளி சிறுமியை முட்டித் தள்ளிய கால்நடை

சென்னை: "பொதுமக்களின் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ பகுதியில் சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்த பசு மாடு, அவ்வழியே சென்ற பள்ளிக் குழந்தையை முட்டித் தூக்கி வீசியதில் அந்தக் குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார். பள்ளி சென்று திரும்பிய குழந்தை வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக மருத்துவமனைக்கு சென்றிருப்பது வேதனையளிக்கிறது. காயமடைந்த குழந்தை விரைவில் முழு நலம் பெற்று வீடு திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக் குழந்தை முட்டித் தூக்கி வீசப்பட்டது மட்டுமின்றி, சாலை விபத்துகளுக்கும் கால்நடைகள் காரணமாக உள்ளன. சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும், அதிக போக்குவரத்து நிகழும் கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையிலும் கால்நடைகள் திடீரென சாலைகளுக்குள் நுழைவதால் அதிக விபத்துகள் நடக்கின்றன; அதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும்.

சென்னை மாநகர எல்லைக்குள் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கால்நடைகளைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது தான் இதற்கு காரணம். சென்னை மாநகரில் கால்நடை வளர்ப்பை சட்டத்தின் வழியாக மட்டுமே பார்க்க முடியாது. கால்நடைகள் சென்னையின் பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரம் சார்ந்தவை என்பதால், அந்தக் கோணத்திலும் தான் பார்க்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில் கால்நடைகளால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.

பொதுமக்களின் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் நேற்று (புதன்கிழமை) மாலை பள்ளி முடிந்து தாயுடன் சென்ற சிறுமியை மாடு முட்டி சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். | வாசிக்க > சென்னையில் சிறுமியை மாடு முட்டிய சம்பவம்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x