Published : 10 Aug 2023 04:45 AM
Last Updated : 10 Aug 2023 04:45 AM
சென்னை: உச்ச நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று 3-வது நாளாக விசாரணை நடத்தினர்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பைபாஸ் இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, அமலாக்கத் துறையினர் கடந்த 7-ம் தேதி இரவு அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது. 3-வது நாளாக நேற்றும் அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். சட்டவிரோத பண பரிவர்த்தனை, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி பண மோசடி செய்தது, அந்த பணத்தை வாங்கி கொடுத்த தரகர்கள், அந்த பணம் எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை கேட்டு, அவரது பதிலை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி, இடையிடையே சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவர்கள் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்துள்ளதால், போதிய ஓய்வு கொடுத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அலுவலக வளாகத்தில் ஆம்புலன்ஸ் வாகனமும் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT