Published : 23 Nov 2017 09:23 PM
Last Updated : 23 Nov 2017 09:23 PM

புதர் மண்டிக் கிடக்கும் அரசுக் கட்டிடங்கள்: தேக்கம்பட்டி ஊராட்சியில் ஓர் அவலம்

தேக்கம்பட்டி கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வேளாண் துறை கட்டிடங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாகவே பயன்பாடற்றுக் கிடப்பதால் இது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதை வேறு பயன்பாட்டிற்காவது மாற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் இந்த ஊர் மக்கள்.

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திற்குட்பட்டது தேக்கம்பட்டி. கோவை மண்டல ஆன்மீகத் தலங்களில் பிரபலமாக விளங்கும் வனபத்திரகாளியம்மன் கோவில் அருகில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது. இங்கே வரிசையாய் அமைந்துள்ள அரசுக் கட்டிடங்கள் புதர் மண்டி, பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வசிக்கும் புகலிடமாகவே மாறிக் கொண்டிருக்கிறது. இந்தக் கட்டிடங்களை ஒட்டியே குழந்தைகளுக்கான அரசு பால்வாடி மையமும் இயங்கி வருகிறது.

அரசுக் கட்டிடங்களிலிருந்து புறப்படும் விஷ ஜந்துக்கள் குறித்த அச்சம் இங்கு பணிபுரிபவர்களுக்கு ஒரு பக்கம் இருக்கிறது. இன்னொரு பக்கம் இதுவரை இல்லாத விதமாக மது அருந்துபவர்கள் தங்கள் இரவு நேர் 'பார்' ஆக பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர் ஊர் மக்கள்.

இதுகுறித்து இவ்வூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறுகையில், ''இந்த கட்டிடத்தில் அலுவலர்கள் வேலை செஞ்சு குறைஞ்சது பத்து வருஷமாவது இருக்கும். அப்புறம் அலுவலர்களே வராம பாழடைஞ்சு கிடக்கு. கதவுகளும் பிடுங்கப்பட்டுள்ளது. இதுக்கு முன்னால இருக்கிற கட்டிடங்கள் டீச்சர்ஸ், நர்சுகள் குவார்ட்டர்ஸா இருந்தது. அதுக்கும் டீச்சர்கள் தங்கலை. அதனால் அதுவும் சும்மாவே கிடக்கு. இங்கே ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. அது வைக்கச் சொல்லி நீண்டநாள் மக்கள் கோரிக்கை. அதையாவது செய்யலாம். செய்ய மாட்டேங்கிறாங்க!'' என தெரிவித்தார்.

இதைப்பற்றி இப்பகுதியை சேர்ந்த விவசாய சங்கத் தலைவர் மூர்த்தி கூறுகையில், ''இந்தக் கட்டிடங்கள் வேளாண்துறையின் கீழ் தகவல் தொடர்பு பயிற்சி வழித்திட்டத்திற்காக 20 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்படுத்தப்பட்டது. அதுக்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு ஆலோசனைகள் கொடுத்திட்டு இருந்தாங்க. பிறகு அந்தத் திட்டத்தை தோட்டக்கலைத்துறையுடன் இணைத்தாங்க. அதன் மூலமா விவசாய இடுபொருள்கள், விதைகள், உரங்கள், மானியம் குறித்தெல்லாம் ஆலோசனைகள் தருவாங்க.

இந்த தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்டு சாலையூர், தேவனாபுரம், கிட்டாம்பாளையம், கெண்டேபாளையம், தாசம்பாளையம், ராமேகவுண்டன் புதூர், குரும்பனூர் இப்படி 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கு. ஊருக்கு 2 அலுவலர்கள் வீதம் 20க்கும் மேற்பட்டோர், இங்கிருந்து ஒவ்வொரு ஊருக்கும் வருவாங்க. ஆலோசனைகள் கொடுப்பாங்க. அது அப்படியே ஆட்கள் குறைஞ்சு கடைசியில் இந்த ஆபீஸிற்கு யாருமே வர்றதில்லை. ஊருக்குள்ளே விவசாயிகளுக்கு ஆலோசனை கொடுக்கவும் அலுவலர்கள் வர்றதில்லை. விவசாயிகள் தேவைன்னா காரமடை போகோணும். அவங்க கிட்ட ஆலோசனை கேட்டுக்கணும்.

இப்படி 10 வருஷத்துக்கு மேலா இந்த கட்டிடங்கள் பயன்பாடில்லாம போச்சு. இதை ஒண்ணு பஞ்சாயத்துக்கு ஒப்படைச்சு பராமரிக்கலாம். வேறு உபயோகத்திற்கு விடலாம். கிராம நிர்வாக அலுவலர் கட்டுப்பாட்டுல கொண்டு வந்து தனியாருக்கு கூட வாடகைக்கு விடலாம். எதுவுமே செய்யறதில்லை. இது மாதிரி வெள்ளியங்காடு, தாயனூர், பில்லூர்னு ஏகப்பட்ட ஊர்கள்ல அரசுக் கட்டிடங்கள் பயன்பாடில்லாம ஐம்பதுக்கும் மேல கிடக்கு. இதைத் தொடர்ந்து ஆட்சியர் குறைகேட்புல சொல்லியாச்சு. மனுவும் கொடுத்தாச்சு. ஒரு அதிகாரிகள் கூட எட்டிப்பார்க்கறது இல்லை'' என மூர்த்தி வேதனை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x