Published : 09 Nov 2017 10:39 AM
Last Updated : 09 Nov 2017 10:39 AM
திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று சுமார் 5 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ்.
அரசு அதிகாரிகள், அலுவலர்கள் ஊர் ஊராகச் சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், இந்திய முறை மருத்துவத்தின் மகத்துவம் குறித்தும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக விளக்கி வருகிறார் திருச்சி மாவட்ட (திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர்) சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ். இதுவரை அவர் சுமார் 5 லட்சம் மாணவ, மாணவிகளைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். அவர் தனது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இதுகுறித்து டாக்டர் காமராஜ் கூறியது:
டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும் சக்தி நில வேம்புக்கு உண்டு. அப்படியே காய்ச்சல் வந்துவிட்டாலும், தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சக்தி பப்பாளி இலைச் சாறுக்கு உண்டு. இவை இரண்டும்தான் டெங்குவை விரட்டியடிக்கும் சக்தி கொண்டவை.
இதுகுறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அவர்களின் குடும்பத்தினரும் விழிப்புணர்வு பெறுவார்கள் என்பதால் பள்ளி, கல்லூரிகளை நோக்கி சித்த மருத்துவ குழுவினர் பயணம் மேற்கொண்டு வருகிறோம். டெங்கு விழிப்புணர்வு மட்டுமல்லாமல், நோய்கள் வராமல் பார்த்துக் கொள்வது எப்படி, வந்தால் இயற்கை முறை மருத்துவத்தின் உதவியுடன் சரிசெய்வது எப்படி என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
அதன்படி, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளிடம் டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். திருச்சி மாவட்டத்தில் 737 பள்ளி, கல்லூரிகளில் 3,51,088 மாணவ, மாணவிகள், கரூர் மாவட்டத்தில் 201 பள்ளி, கல்லூரிகளில் 49,243 மாணவ, மாணவிகள், அரியலூர் மாவட்டத்தில் 128 பள்ளி, கல்லூரிகளில் 23,179 மாணவ, மாணவிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் 92 பள்ளி, கல்லூரிகளில் 43,369 மாணவ, மாணவிகள் என இதுவரை சுமார் 5 லட்சம் பேரை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். தொடர்ந்து இந்த பணி நடைபெற்று வருகிறது.
மாணவ, மாணவிகளிடம் டெங்கு குறித்து மட்டுமல்லாமல், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோ போன்ற இந்திய முறை மருத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
பெரும்பாலும் ஏற்படக்கூடிய நோய்களில் சளி, இருமலுக்கு தாளி சாதி சூரணம், தலைவலிக்கு திரிகடுகு சூரணம், வாந்திக்கு மாதுளை மணப்பாகு, ஏலாதி சூரணம், வயிற்றுப்போக்குக்கு தயிர்சுண்டி சூரணம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறோம்.
சிறு வயதிலேயே ஆங்கில மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல், இந்திய முறை மருந்துகளை எடுத்துக்கொள்ளப் பழகிக்கொண்டால், 50 வயதுக்கு மேல் பலருக்கும் வரக்கூடிய ரத்த அழுத்தம் உள்ளிட்ட இதய நோய்கள், சர்க்கரை வியாதி போன்ற எந்த நோயும் அண்டாது என்பது நிச்சயம். நல்ல விஷயத்தை பலருக்கும் தெரியப்படுத்தி அவர்களும் பயனடையச் செய்வார்கள் என்பதால்தான் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT