Published : 09 Aug 2023 03:30 PM
Last Updated : 09 Aug 2023 03:30 PM
சென்னை: தமிழ் வழியில் முதல் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்த மருத்துவர்களுக்கு, வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் வேலையை பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி தகுதி வரை, தமிழ் மொழி வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த ஒதுக்கீடு, தமிழ் வழியில் படிக்க வேண்டும் என்ற உணர்வை அதிகரிக்கும். தமிழ் வழியில் படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற தவறான கருத்தை தகர்க்கும். வேறு மாநிலத்தவர் தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பை பெறுவதையும் தடுக்க உதவும்.
அதுமட்டுமின்றி, தமிழ் வழியில் படிப்பவர்கள் பெரும்பாலும் அரசு பள்ளியை சார்ந்தவர்களாக உள்ளனர். சமூக ரீதியாகவும்,கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாவும், மிக மிக பின்தங்கிய, கிராமப்புற குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். எனவே, இந்த இடஒதுக்கீடு என்பது, தமிழ் வழிக் கல்வியைப் பாதுகாப்பதுடன், சமூகரீதியாக, கல்விரீதியாக மிகவும் பின்தங்கிய, ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கிராமப்புற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பை பெறவும் உதவுகிறது. எனவே, இவ்வொதுக்கீடு வரவேற்புக்குரியது. மருத்துவப் பணியாளர் பணிநியமன ஆணையம் (எம்.ஆர்.பி) சில பணிகளில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது. இவை பாராட்டத்தக்கது.
அதேபோல், மருத்துவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீடு, அரசு மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்பில் வழங்கிட வேண்டும். மருத்துவக் கல்வி, எம்.பி.பி.எஸ்., தமிழ் வழியில் இல்லாத நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மருத்துவர்களுக்கு, 20% இடஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை, தமிழ்நாடு அரசு எடுத்திட வேண்டும். கோவிட் பரவிய காலத்தில் மக்களுக்கு அர்ப்பணிப்போடு சேவை புரிந்த மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு, அவர்களது சேவையை போற்றும் வகையில், அரசுப் பணியில் சேர்வதற்கான, எம்.ஆர்.பி தேர்வு மதிப்பெண்ணோடு, கூடுதல் ஊக்க மதிப்பெண்ணை வழங்கிட வேண்டும்.
நிரந்தர வேலை வாய்ப்பு பெற வழி வகை செய்ய வேண்டும். இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இரண்டு ஆண்டுகள் கோவிட் பணி முடித்தவர்களுக்கே ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத்தரப்பில் கூறுவது, இதில் யாருக்கும் பயனளிக்காது எனக் கூறப்படுகிறது. எனவே, அத்தகைய முடிவை கைவிட்டு, கோவிட் பணியாற்றிய காலத்திற்கேற்ப ஊக்க மதிப்பெண்களை வழங்கிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ,தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT