Published : 09 Aug 2023 02:47 PM
Last Updated : 09 Aug 2023 02:47 PM

3,987 பயனாளிகளுக்கு தலா ரூ.25,070 - ஹஜ் மானியத் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

தமிழக முதல்வர் ஸ்டாலின் 3987 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ஹஜ் மானியத் தொகை வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதல் முறையாக ஹஜ் பயணம் மேற்கொண்ட 3,987 பயனாளிகளுக்கு தலா ரூ.25,070- வீதம் ஹஜ் மானியத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரின் சீரிய முயற்சியின் பலனாக, இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு சென்னை புறப்பாட்டுத் தளமாக அறிவிக்கப்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் சென்னையிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டு, தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றி தாயகம் திரும்பியுள்ளனர். தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதன்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசு ஹஜ் மானியம் வழங்கி வருகிறது.

அதற்காக இந்த ஆண்டு தமிழக அரசால் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தகுதியுள்ள பயணி ஒருவருக்கு ரூ.25,070 வீதம் 3,987 பயனாளிகளுக்கு இம்மானியத் தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, 5 பயனாளிகளுக்கு முதல்வர் இன்று தலா ரூ.25,070-க்கான காசோலைகளை ஹஜ் மானியத் தொகையாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலர் முகம்மது நசிமுத்தின், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், சிறுபான்மை நல இயக்குநர் மு. ஆசியா மரியம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x