Published : 09 Aug 2023 02:46 PM
Last Updated : 09 Aug 2023 02:46 PM

போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கும் அரசாணை முழுமையாக அமல்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

கோப்புப்படம்

சென்னை: போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கும் அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுகிறது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், "மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்தது. இந்த திருத்தங்களின் அடிப்படையில், தமிழக அரசு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகைகளை உயர்த்தி கடந்த 2022-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. ஆனால், அரசாணை பிறப்பித்திருந்தாலும், தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, இந்த அரசாணையை முழுமையாக அமல்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், அபராதத் தொகையை அரசு உயர்த்தியதால், மக்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனால், வாகன தணிக்கையில் ஈடுபட போக்குவரத்து காவல்துறையினர் சோதனைகளில் ஈடுபட தயக்கம் காட்டுகின்றனர். இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, விதிகளை மீறி வாகனங்களை இயக்குவது தொடர்கிறது. அதிவேகமாக செல்வது, மது போதையில் வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள், சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்பி விடுகின்றனர். சிறிய சாலைகளில் செல்லக்கூடிய இருசக்கர வாகனங்கள், ஷேர் ஆட்டோ தொடங்கி, நெடுஞ்சாலைகளில் செல்லும் கனரக வாகனங்கள் வரை இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகளும், உடல் பாகங்களை இழக்கக்கூடிய சம்பவங்களும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

எனவே, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை, மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகளில் குறைந்தது 10 நாட்கள் பணியாற்ற உத்தரவிடக் கோரி அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். ஆனால், அக்கடிதத்துக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. எனவே, அந்த கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் " என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், “போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கும் அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுகிறது. போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள கடந்த வாரம்கூட அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது" என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை. அதேநேரம், மனுதாரர், குறிப்பிட்டு எந்தவொரு சம்பவத்தையும் இந்த மனுவில் தெரிவிக்கவில்லை எனக் கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x