Published : 09 Aug 2023 06:45 AM
Last Updated : 09 Aug 2023 06:45 AM

ஓசூர் அருகே பட்டாசு ஆலை ஆய்வின்போது வெடி விபத்து - டிஆர்ஓ, வட்டாட்சியர் உட்பட 3 பேர் காயம்

ஓசூர்: கெலமங்கலம் அருகே பட்டாசு ஆலை ஆய்வுப் பணியின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (சிறப்பு நிலவரி), வட்டாட்சியர் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் ஜூலை 29-ம் தேதி ரவி என்பவரின் பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில், ரவி உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசுக் கடைகள் மற்றும் ஆலைகளின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஓசூரை அடுத்தகெலமங்கலம் அருகே ஜெ.காருப்பள்ளி வெங்கடேசபுரத்தில் பெரியநாயுடு என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜூ கிருஷ்ணன் என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.

இந்த ஆலையில் நேற்று மதியம் 12.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் (சிறப்பு நில வரி) பாலாஜி (52), வட்டாட்சியர் (நில வரி) முத்துப்பாண்டி (47) ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஆலை வளாகத்திலிருந்த பட்டாசு இருப்பு அறையைத் திறக்குமாறு ஆலையின் மேலாளர் சீமானிடம் (30) அதிகாரிகள் வலியுறுத்தினர்.

அவரிடம் சாவி இல்லாததால் பூட்டை உடைத்து குழுவினர் உள்ளே சென்றபோது, எதிர்பாராதவிதமாகக் கிடங்கிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறி தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, வட்டாட்சியர் முத்துப்பாண்டி, ஆலை மேலாளர் சீமான் ஆகியோர் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த கெலமங்கலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர். மேலும், காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் 90 சதவீதம் தீக்காயம் அடைந்த சீமான், சேலம் அரசு மருத்துவமனைக்கும், 25 சதவீதம் காயம் அடைந்த பாலாஜி பெங்களூரு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். லேசான காயம் அடைந்த முத்துப்பாண்டி ஓசூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த ஆட்சியர் கே.எம்.சரயு, எஸ்பி சரோஜ்குமார் தாகூர், எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயர் சத்யா ஆகியோர் காயம் அடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், விபத்து நடந்த ஆலையில் உதவி ஆட்சியர் சரண்யா, எஸ்பி மற்றும் தருமபுரி தடயவியல் துறை உதவி இயக்குநர் மாணிக்கம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக ஆட்சியர் கே.எம்.சரயு கூறும்போது, “ஜெ.காருப்பள்ளி பட்டாசு ஆலை ஆய்வின்போது, எதிர்பாராமல் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர். ஆலை நடத்த 2025-ம் ஆண்டு வரை அனுமதி பெற்றுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்” என்றார்.

வெள்ளை பாஸ்பரஸ் காரணமா?: சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்துக்கு அங்கிருந்த வெடி தயாரிக்க வைக்கப்பட்டிருந்த மூலப் பொருட்கள் காரணமாக இருக்கலாம். குறிப்பாக வெள்ளை பாஸ்பரஸ் இருந்தால் திடீர் வெடி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த ஆலையில் ஏற்கெனவே ஏப்ரல் 29-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி முனி ரத்தினம் என்பவரின் கை சேதமடைந்தது. வெடி விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x