Published : 09 Aug 2023 08:45 AM
Last Updated : 09 Aug 2023 08:45 AM
சென்னையில் முக்கிய ரயில் வழித்தடங்களில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்கள், அவற்றை ஒட்டிய பகுதிகளை பயணிகள் எளிதாக கடக்கவும், வந்தடையவும் போதிய நடைமேம்பாலம், சுரங்கப்பாதை, எஸ்கலேட்டர் இல்லாததால், நாள்தோறும் மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக புறநகர் மின்சார ரயில் சேவை உள்ளது. இது, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் கீழ் வருகிறது. 697 கி.மீ. தொலைவைக் கொண்ட பரந்த எல்லையை உள்ளடக்கியது இந்த ரயில்வே கோட்டம்.
இக்கோட்டத்தில் சென்னை கடற்கரை- தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு, சென்னை கடற்கரை-வேளச்சேரி, சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர் மற்றும் அரக்கோணம், சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி ஆகிய முக்கிய வழித்தடங்கள் உள்ளன. இந்த வழித்தடங்களில் தினசரி 650 ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 12 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவதில் புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ரயில்கள் ஓடும் பல ரயில் நிலையங்களில் நடைமேம்பாலம், சுரங்கப்பாதை, நகரும்படிக்கட்டு, மின்தூக்கி வசதி, வாகனங்கள் செல்ல மேம்பாலங்கள் இல்லை. இவற்றை அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ரயில் தண்டவாளத்தை கடந்து ரயில் நிலையத்துக்கு வருவது, அங்கிருந்து வெளியேறி குறிப்பிட்ட இடத்துக்கு செல்வது, ஒரு நிலையத்தில் இருந்து மாறி மற்றொரு நிலையத்துக்கு செல்வது ஆகியவற்றில் பல இன்னல்களை பயணிகள் சந்திக்கின்றனர்.
இதுதவிர, சில இடங்களில் சுரங்கப்பாதை அல்லது நடைமேம்பாலம் இல்லாத நிலையில், தண்டவாளத்தை கடந்து ரயிலில் அடிப்பட்டு பலர் இறக்கும் சம்பவமும் நிகழ்கின்றன. மக்கள் அடர்த்தி அதிகமுள்ள இடங்களில் ரயில்வே கேட் வழியாக தண்டவாளத்தை கடந்து செல்வதற்கு பதிலாக, அங்கு சுரங்கப்பாதை அல்லது நடைமேம்பாலம் அமைக்க வலியுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து சென்னை ரயில் பயணிகள் ஒருங்கிணைப்பாளர் ஜெ.கே.ரகுநாதன் கூறியதாவது: சென்னை கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டு, சுரங்கப்பாதை, மின்தூக்கி வசதி இல்லாததால் ,மக்கள் அல்லல் படுகின்றனர். நிலையங்களுக்கு வெளியே நெடுஞ்சாலையை கடந்து செல்லும் விதமாக, நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் உள்ள நிலையங்களுக்கு செல்ல முக்கிய மையமாக பூங்கா ரயில் நிலையம் உள்ளது. இங்கு நகரும் படிக்கட்டு, மின்தூக்கி வசதி இல்லாதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையத்தில் வயதானவர்கள் படிக்கட்டில் ஏறி செல்லசிரமப்படுகின்றனர். தற்போது உள்ள நடைமேம்பாலமும் அபாயகரமாக உள்ளதால் புதிய நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்.
மாம்பலம் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் உள்ளது. இங்கு, மின்தூக்கி, நகரும் படிக்கட்டு அமைக்க வேண்டும். வெளியே சாலையுடன் ஓர் தொடர்பை ஏற்படுத்த வேண்டும். பொதுவாக, நடைமேம்பாலம் நெடுஞ்சாலை கடக்கும் வகையில் உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் குரோம்பேட்டை பகுதியில் தண்டவாளத்தை கடக்கும் போது, ரயிலில் அடிப்பட்டு இறக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில், ராதா நகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்தப்பணி விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து குரோம்பேட்டை ரயில் பயணிகள் சங்கத் தலைவர் சந்தானம் கூறும்போது, "குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி அருகே லெவல் கிராசிங் கேட் உள்ளது. இங்கு சுரங்கப்பாதை மற்றும் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும். ராதா நகர் பகுதியில் லெவல் கிராசிங் கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க நெடுங்காலமாக கோரிக்கை வைத்து வந்தோம். இப்போது, பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. பல்லாவரம்- குரோம்பேட்டை இடையே ரயில் தண்டவாளத்தின் இருபுறத்தில் மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ளது. இங்கு ஆய்வு செய்து தேவையான இடங்களில் நடைமேம்பாலம், சுரங்கப்பாதை வேண்டும்.
இதுதவிர, தாம்பரம்- செங்கல்பட்டு இடையே பொத்தேரி, மறைமலைநகர் ரயில் நிலையங்களில் அண்மையில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது. இங்கு வாகனங்கள் செல்ல மேம்பாலமும், பயணிகளுக்கான சுரங்கப்பாதையும் அமைக்க வேண்டும். ஊரப்பாக்கம், காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட நிலையங்களிலும் இந்த வசதி தேவை. இவ்வாறு அவர்கூறினார்.
கும்மிடிப்பூண்டி மார்க்கம்: சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பல ரயில் நிலையங்களில் நடைமேம்பாலம் பயணிகளுக்கு வசதியாக இல்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் மாநில செயலாளர் பி.துளசி நாராயணன் கூறும்போது, "கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் வடக்குபகுதியில் உள்ள நடைமேம்பாலம் அகலம் குறைவாக உள்ளது. இதுமக்களுக்கு வசதியாக இல்லை.
கிழக்கு-மேற்கு பகுதியை இணைக்கும் வகையில், நகரும் படிக்கட்டு அமைக்க வேண்டும். மீஞ்சூர் ரயில்நிலையம் அருகே நடைமேம்பாலம் கட்டும்பணி 2 ஆண்டுகளுக்கு மேலாக மெதுவாக நடக்கிறது. இதை விரைந்து முடிக்க வேண்டும். பொன்னேரி ரயில் நிலையத்தில் பிரதான இடத்தில் சுரங்கப்பாதை இல்லை" என்றார்.
சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர் மார்க்கத்தில் பல நிலையங்களில் இதை நிலையே தொடர்கிறது. திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணி கடந்த 3 ஆண்டுகளாக மந்தகதியில் நடைபெறுகிறது.
இது குறித்து திருநின்றவூர் ரயில் பயணிகள் சங்கத் தலைவர் முருகையன் கூறியதாவது: திருநின்றவூர் ரயில் நிலையத்தில் நடைமேடையின் கடைசி பகுதியில் நடைமேம்பாலம் உள்ளது. இது பயணிகளுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நிலையத்தின் மத்தியில் நடைமேம்பாலம் இருந்தால் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும், நிலையத்தின் உள்ளே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.
நெமிலிச்சேரி நிலையத்தின் வெளியே சுரங்கப்பாதை இருக்கிறது. ஆனால், மழை காலத்தில் மழைநீர் தேங்கி விடுவதால், பயணிகள் சிரமப்படுகின்றனர். இங்கு நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்,
அண்ணனூரில் நடைமேடை மிக உயரமாக இருக்கிறது. இதில் ஏறி செல்ல வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும்.
வேப்பம்பட்டு நிலையத்தில் பயணிகள் வசதிக்காக, சுரங்கப்பாதை அமைத்து 5 ஆண்டு ஆகிவிட்டது. ஆனால்,இது பயன்படுத்தப்படாமல் உள்ளது. அருகில் உள்ள குட்டையில் இருந்து சுரங்கப்பாதைக்கு நீர் ஊற்று வருவதால், மூடப்பட்டுள்ளது. இதனால், தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
எனவே, இதற்கு மாற்று ஏற்பாடு காண வேண்டும். பட்டாபிராம் நிலையத்தில் நடைமேம்பாலம் இருக்கிறது. நிலையத்தின் தெற்கு- வடக்கு பகுதிகளை இணைக்கும் வகையில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஒட்டுமொத்தமாக, சென்னை ரயில்வே கோட்டத்தில் பல ரயில் நிலையங்களை ஒட்டி தண்டவாளம், சாலையை கடக்க போதுமான நடைமேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைப்பது அவசியமாகிறது. இதுகுறித்து ஆய்வு செய்து, தேவையான இடங்களில் நடைமேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது,” அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ், சென்னை ரயில்வே கோட்டத்தில் முதல் கட்டத்தில் 15 நிலையங்கள் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ஆகிய நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மீதமுள்ள நிலையங்கள் விரைவில் மேம்படுத்தும் பணி தொடங்கும். இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது, பயணிகளுக்கு தேவையான நிலையங்களில் நடைமேம்பாலம், மின்தூக்கி, நகரும் படிக்கட்டு, சுரங்கப்பாதை உட்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT