Published : 05 Nov 2017 10:55 AM
Last Updated : 05 Nov 2017 10:55 AM
பணமதிப்பு நீக்கம் தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறிய கருத்துகள், பேட்டிகள், உரைகள் ஆகியவற்றைத் தொகுத்து, வரும் 8-ம் தேதி நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தையொட்டி நூலாக விநியோகிக்க அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.
பணமதிப்பு நீக்க அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி வெளியிட்டது. அந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில், அந்த நடவடிக்கையைக் கண்டிக்கும் விதமாக வரும் நவம்பர் 8-ம் தேதியை கறுப்பு தினமாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. அன்றைய தினம் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து நாடுதழுவிய ஆர்ப்பாட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்களை அவதிக்குள்ளாக்கும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, எவ்வித பலனையும் தராது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆரம்பம் முதலே கூறிவருகிறார். இந்த நிலையில், வரும் 8-ம் தேதி நடக்கவுள்ள கறுப்பு தின ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு, பணமதிப்பு நீக்கம் தொடர்பாகப.சிதம்பரம் இதுவரை தெரிவித்த கருத்துகள், பேட்டிகள், உரைகள் அனைத்தையும் தொகுத்து புத்தகமாக வெளியிடும் முயற்சியில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட் டுள்ளனர்.
இதுதொடர்பாக ‘தி இந்து’ விடம் அவர்கள் கூறியதாவது:
பணமதிப்பு நீக்கம் மோசடி வேலை என்பதை ப.சிதம்பரம் தான் முதலில் சொன்னார். அவர் எழுப்பிய சந்தேகங்களுக்கு பாஜக தரப்பில் இருந்து இதுவரை பதில் இல்லை. அவர் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் உண்மை என இப்போது நிரூபணமாகி வருகிறது. 8-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில், அவரது கருத்துகளை பொதுமக்களிடம் மேலும் பரவலாக்குவதற்காக, ‘மத்திய அரசின் பணமதிப்பு இழப்பு அறிவிப்பு’ என்ற புத்தகம் அச்சடிக்கப்பட்டு வருகிறது.
126 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில் பணமதிப்பு நீக்கம் தொடர்பாக ப.சிதம்பரம் இதுவரை வெளியிட்ட கருத்துகள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் தங்கள் பெயர் மற்றும் படங்களுடன் இந்தப் புத்தகங்களை அச்சடித்து விநியோகிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஒரு லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தினர் செய்கின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் இணைந்து இந்தப் புத்தகங்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி எடுத்தால், அது கட்சிக்கு இன்னும் வலுசேர்க்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT