Published : 08 Aug 2023 04:36 PM
Last Updated : 08 Aug 2023 04:36 PM
தென்காசி: தென்காசி - திருநெல்வேலி இடையே தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் II-ன் கீழ் ரூ.430.71 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை பணி மந்தமாக நடைபெறுவதால் இந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
பாவூர் சத்திரத்தை அடுத்த செல்வ விநாயகர்புரத்தில் இருந்து தென்காசி ஆசாத் நகர் வரை ஒரு சில இடங்கள் தவிர பெரும்பாலான பகுதிகளில் சாலை அமைக்கும் பணி முடிந்துள்ளது. முறையான திட்டமிடல் இல்லாததால் இடது மற்றும் வலது புற சாலைகளில் இருபுறங்களிலும் எதிரெதிர் திசைகளில் வாகனங்கள் சென்று வருகின்றன. அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
ராமச்சந்திரபட்டணம் பகுதியில் குறிப்பிட்ட சிறிது தொலைவுக்கு மட்டும் நீண்ட காலமாக சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்கத்துக்காக கையகப் படுத்தப்பட்ட நிலத்தில் மின் கம்பம் உள்ளது.
இதனை இடமாற்றம் செய்யாமல் அப்படியே வைத்து ஜல்லி கொட்டப்பட்டு, சமன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையின் நடுவில் மின் கம்பம் உள்ளது. இந்த வழியாக வாகனங்கள் செல்வதைத் தடுக்க முறையாக சாலையை அடைத்தும் வைக்கவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலை அமைக்கும் பணியில் தொடர்ந்து அலட்சியப் போக்கு நீடிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்த வழியாக வாகனங்கள் செல்வதைத் தடுக்க முழுமையாக தடுப்புகள் அமைக்க வேண்டும். மின் கம்பத்தை இடமாற்றம் செய்து, சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். சாலை பணியை மேற்கொள்பவர்கள் விலைமதிப்பற்ற மனித உயிர்களின் மீது அக்கறை வைத்து செயல்பட வேண்டும் என்றும், பணிகளை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT