Published : 08 Aug 2023 01:56 PM
Last Updated : 08 Aug 2023 01:56 PM

ஸ்ரீரங்கம் கோயிலின் 21 கோபுரங்களையும் ஆய்வு செய்ய உத்தரவு: திருச்சியில் சேகர்பாபு தகவல்

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுர பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உடனிருந்தார்.

ஸ்ரீரங்கம்: "திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் இடிந்த விழுந்த கோபுரம் மட்டுமன்றி, இக்கோயிலில் உள்ள 21 கோபுரங்களையும், ஆய்வு செய்து கோபுரங்களின் ஸ்திரத்தன்மை குறித்த அறிக்கையையும் கேட்டுள்ளோம். அந்த அறிக்கை கிடைத்தவுடன், உடனடியாக பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்" என்று தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அந்தப் பகுதியில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "ஒட்டுமொத்தமாக இந்த ஸ்ரீரங்கம் கோயிலில் இருக்கின்ற 21 கோபுரங்களையும் என்ஐடி ஆய்வு மேற்கொள்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இங்குள்ள கோபுரத்தை என்ஐடி ஆய்வு செய்து, அதன் அறிக்கையை ஓரிரு நாட்களில் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இடிந்த விழுந்த இந்த கோபுரம் மட்டுமன்றி, இக்கோயிலில் உள்ள 21 கோபுரங்களையும், ஆய்வு செய்து கோபுரங்களின் ஸ்திரத்தன்மை குறித்த அறிக்கையையும் கேட்டுள்ளோம். அந்த அறிக்கை கிடைத்தவுடன், உடனடியாக பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். 2015-ம் ஆண்டுதான் ரூ.34 லட்சம் செலவில் இடிந்த விழுந்த கோபுரத்தின் பழுதுபார்க்கும் பணிகள் நடந்திருக்கிறது. தற்போதுகூட, இந்த கோபுரம் சிதிலமடைந்திருப்பதாக ஊடகத்தின் வாயிலாக வந்த செய்தியை அறிந்து ரூ.94 லட்சம் செலவில், மராமத்துப் பணிகளுக்காக ஒரு திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டு, அதற்கு ஆணையரிடத்தில் ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் 3 பிரகாரங்களிலும் இருக்கின்ற மரங்கள் சிதிலமடைந்திருக்கின்றன. அவை அனைத்தையும் மாற்றும் பணிகளையும் செய்ய வேண்டிய இருப்பதால், இந்தப் பணிகளை முடிக்க ஓராண்டுக்கு மேலாகும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்" என்று அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உடனிருந்தார்.

முன்னதாக, ஸ்ரீரங்கம் அரங்கநாதன் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும் மேற்கூரை பூச்சுகளும் அதனை தாங்கி நிற்கும் தூண்களும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. அபாயகரமாக உள்ள இந்த கிழக்கு வாசல் கோபுர வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதனால் அச்சத்துடன் செல்லும் நிலையே நிலவியது. இதனிடையே, ஆக.4-ம் தேதி மாலை திருச்சி பகுதிகளில் 30 நிமிடங்கள் வரை நல்ல மழை பெய்தது.

இதனையடுத்து நள்ளிரவில் இரண்டு மணியளவில் அரங்கநாதன் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் சேதமடைந்த கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும் உள்ள பூச்சுகள் இடிந்து விழுந்தது. நள்ளிரவு நேரத்தில் இடிந்து விழுந்ததால், இதில் யாருக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. இடிந்து விழுந்த கற்கள் மற்றும் பூச்சுகளை அப்புறப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அதேநேரம், அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x