Published : 08 Aug 2023 06:08 AM
Last Updated : 08 Aug 2023 06:08 AM
சென்னை: தமிழக முதல்வர் அறிவுறுத்தல்படி, ஆசிரியர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுடன், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது, பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்துவது, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கடந்த மாதம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், சென்னையில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற கருத்துகேட்பில் பங்கேற்ற ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வழங்கினர்.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக நிதியமைச்சருடன் ஆலோசித்து, தக்க முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அப்போது தெரிவித்திருந்தார்.
அதிகாரிகள் குழுவினர்: இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, தலைமைச் செயலகத்தில் நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை, அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், கல்வித் துறை அதிகாரிகள் குழுவினர் சந்தித்தனர்.
இந்தக் கூட்டத்தில், நிதித் துறைச் செயலர் டி.உதயசந்திரன், பள்ளிக்கல்வித் துறைச் செயலர் காகர்லா உஷா, இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், ஆசிரியர்களின் கோரிக்கைகள் மற்றும் தற்போதைய நிதிநிலை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, முதல்வர் கவனத்துக்கு கோரிக்கைகள் கொண்டுசெல்லப்பட்டு, தக்க அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT