Published : 08 Aug 2023 06:13 AM
Last Updated : 08 Aug 2023 06:13 AM
சென்னை: என்எல்சி நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்களில் வரும் செப். 15-ம் தேதிக்குப் பிறகு யாராவது பயிரிட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு மட்டுமே ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க முடியும் என்ற என்எல்சி தரப்பு வாதத்தையும் உறுதி செய்துள்ளது.
நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தின் 2-ம் கட்ட சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக, விளை நிலங்கள் வழியாக கால்வாய் வெட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது பொக்லைன் இயந்திரங்களால் நெல் பயிர்கள் சேதமடைந்தன. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாமக தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயி முருகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறும், என்எல்சி நிலத்தில் பயிரிட்டுள்ளவர்கள் வரும் செப். 15-ம் தேதிக்குள் அறுவடையை முடித்து, நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, என்எல்சி நிர்வாகம் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் வழக்கறிஞர் நித்யானந்தம் ஆகியோர் ஆஜராகி, “கடந்த 2006 முதல் 2023 வரை 602 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுபடி இந்த நில உரிமையாளர்கள் அனைவருக்கும் பல்வேறு காலகட்டங்களில் ரூ.6 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை இழப்பீடு மற்றும் கருணைத்தொகை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், என்எல்சி நிலத்தில் விவசாயிகள் அத்துமீறி விவசாயம் செய்துள்ளனர்” என்றனர்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “கருணைத்தொகை பெறாதவர்களுக்கு, கருணைத்தொகை வழங்குவதற்காக, கிராமம் வாரியாக அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் செப். 15-ம் தேதிக்குள் கருணைத்தொகை வழங்கப்படும். அதற்குள் விவசாயிகள் அறுவடையை முடித்து, நிலத்தை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.
அதையடுத்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், “பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கருணைத்தொகையை தமிழக அரசு வரும் செப்.15-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். செப்.15-க்குப் பிறகு என்எல்சிக்கு சொந்தமான நிலங்களில் யாராவது பயிரிட்டால், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, 2014-ம் ஆண்டுக்குப்பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு மட்டுமே ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க முடியும் என்ற என்எல்சி தரப்பு வாதமும் ஏற்புடையது.
என்எல்சி நிர்வாகத்துக்கு எதிராக அரசியல் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் சேதப்படுத்தப்பட்ட பொது சொத்துகளுக்கான இழப்பீட்டை, சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து வசூலிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT