Published : 08 Aug 2023 06:27 AM
Last Updated : 08 Aug 2023 06:27 AM

வேற்றுமையில் ஒற்றுமையோடு நாட்டின் பாரம்பரியத்தை கட்டிக்காக்கும் புதுச்சேரி: குடியரசுத் தலைவர் முர்மு பாராட்டு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சுதந்திர போராட்ட வீரா் வேலு நாச்சியாரின் நாடகத்தில் நடித்தவரைப் பாராட்டி, வாள் ஒன்றை பரிசளித்தார். உடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர். படம்: எம்.சாம்ராஜ் 

புதுச்சேரி: வேற்றுமையில் ஒற்றுமையோடு நம் நாட்டின் பாராம்பரியத்தை புதுச்சேரி முன்னெடுத்துச் செல்கிறது என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.

குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பொறுப்பேற்ற பின், முதன்முறையாக புதுச்சேரிக்கு 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று வந்தார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு நேற்று காலை வந்த அவரை, துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.

பிறகு காரில் ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்ற குடியரசுத் தலைவர், அங்கு ரூ.17 கோடியில் நிறுவப்பட்டுள்ள புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை கருவியை இயக்கி வைத்தும், வில்லியனூர் ஓதியம்பட்டு சாலையில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனையை காணொலி மூலம் திறந்து வைத்தும் பேசியதாவது:

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்களில் ஒருவரான அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறும்போது, நான் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. நாட்டுக்கு முழு சுதந்திரம் தேவை என்ற விருப்பத்தை ‘வந்தே மாதரம்’ பத்திரிகையில் வெளிப்படுத்திய இந்தியாவின் முதல் அரசியல் தலைவர்களில் அரவிந்தரும் ஒருவர்.

ஒடிய மொழியில் என்னை வரவேற்றாலும், குடியரசுத் தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு அனைத்து மொழிகளும் என் மொழிதான். வரலாற்றின் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மக்களை புதுச்சேரி ஈர்த்துள்ளது என்பது மிகவும் சுவாரஸ்யமானது.

350 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் வர்த்தக நிலையங்களை நிறுவினர். பிரெஞ்சுப் பகுதிகளின் கவர்னர் ஜெனரலாக இருந்த டுப்ளே, புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களின் கோட்டையாக மாற்ற விரும்பினார். பிரெஞ்சுக்காரர்களின் காலனித்துவ விருப்பத்துக்கு முற்றிலும் மாறாக, அரவிந்தரோ 20-ம் நூற்றாண்டில் இந்த இடத்தை ஆன்மிக ஆறுதலுக்கான சிறந்த உறைவிடமாகத் தேர்ந்தெடுத்தார்.

புதுவையின் ஆன்மிக அம்சங்களில் யோகாவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. புதுவையில் வசித்தவர்கள் சுதந்திர போராட்டத்தின்போது இந்திய மக்களோடு சமமாக செயல்பட்டனர். புதுவை சிறந்த எழுத்தாளர்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் தாயகமாக திகழ்ந்துள்து. பாரதிதாசன் இங்கு பிறந்தவர். மகாகவி பாரதியார் இங்கே வசித்து சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். விவிஎஸ் ஐயர் சிறந்த தமிழ் அறிஞர்,சுதந்திர போராட்டத்தில் புதுவையில் தங்கி பங்கேற்றார்.

புதுவையின் அரசியல், சமூகவியல் அசாதாரணமானது. புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாம் என 4 பிராந்தியங்களையும், மொழி வேற்றுமையில் ஒற்றுமை என நம் நாட்டின் கலாச்சாரம், பாராம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறது. இங்கு பலதரப்பட்ட கலாச்சார நீரோட்டங்களின் கலவையைக் காண்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். இன்று, அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் மாத்ரி மந்திரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x