Last Updated : 07 Nov, 2017 08:15 AM

 

Published : 07 Nov 2017 08:15 AM
Last Updated : 07 Nov 2017 08:15 AM

ஹெலிகாப்டர் இறங்கு தள வசதியுடன் 121 பன்நோக்கு புயல் நிவாரண மையங்கள்: ரூ.294 கோடியில் 12 கடலோர மாவட்டங்களில் கட்டிமுடிக்கப்பட்டது

வெள்ளம், புயல், சுனாமி போன்ற பேரிடர் காலங்கள் மட்டுமல்லாமல் சாதாரண காலங்களிலும் பயன்படுத்தும் வகையில் 12 கடலோர மாவட்டங்களில் ரூ.294 கோடியில் 121 பன்நோக்கு புயல் நிவாரண மையங்கள் கட்டப்பட்டுள்ளன.

கடந்த 2004-ம் ஆண்டு தமிழ்நாட்டை சுனாமி தாக்கியபோது, பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது கடலோர மாவட்டங்களில் 123 புயல் நிவாரண மையங்கள் மட்டுமே இருந்தன. இந்த மையங்கள் 1979 -1991-ம் ஆண்டு காலக்கட்டங்களில் கட்டப்பட்டவையாகும். வட்டவடி வில் இருக்கும் இந்த மையங்கள் வெள்ளம், புயல், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் மட்டும் பயன்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இவற்றில் 114 மையங்கள் சுனாமி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 50 லட்சத்தில் சீரமைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இம்மையங்கள் குடியிருப்புப் பகுதிகளில் இல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருப்பது, குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே தங்கும் வசதி, செல்லப்பிராணிகளுக்கு அனுமதி இல்லை, போதிய படுக்கை வசதியின்மையால் முதியோர், குழந்தைகள் அவதி, தனிப்பட்ட முறையில் பொருட்களை வைத்துக்கொள்ள இடவசதியின்மை, சப்தம் அதிகமாக இருப்பது, நெரிசல், தனிமைக்கான வசதியின்மை போன்ற காரணங்களால் பேரிடர் காலங்களைத் தவிர சாதாரண காலங்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன.

2004-ம் ஆண்டு சுனாமியின்போதும், 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பேரிடர் காலம் மட்டுமல்லாமல் சாதாரண காலத்திலும் பயன்படுத்தும் வகையில் பன்நோக்கு புயல் நிவாரண மையங்கள் (Permanent Multipurpose Evacuation Shelters) கட்ட அரசு திட்டமிட்டது. அதன்படி, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு கட்டப்பட வேண்டும் என்ற நோக்கில் கடந்த 20 மாதங்களில் 12 கடலோர மாவட்டங்களில் 121 பன்நோக்கு புயல் நிவாரண மையங்கள் ரூ.294 கோடியே 24 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளன.

இதுகுறித்து பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இரண்டு மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த மையங்கள் வெள்ளம், புயல், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் மட்டுமல்லாமல் சாதாரண காலங்களில் பள்ளிக் கட்டிடம், சமூகநலக் கூடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் காத்திருப்பு அறை, மீன்வளத்துறை பணியாளர்களின் பயிற்சி மையங்களாக செயல்படும். 500 மற்றும் ஆயிரம் பேர் தங்கும் வசதி கொண்ட இம்மையங்களின் மொட்டை மாடி யில் ஹெலிகாப்டர் இறங்குதளம் 564 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு அருகிலேயே கட்டப்பட்டுள்ள இந்த மையங்களில் குடிநீர், கழிப்பிடம், மின்சாரம், ஜெனரேட்டர், ஊனமுற்றோர், குழந்தைகளுக் காக சாய்தள பாதை, கால்நடைகளுக்கான இடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிக ளும் உள்ளன. இம்மையங்களின் மேற்பகுதியிலும் அருகில் உள்ள இடங்களிலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் மிக விரைவில் அமைக்கப்படவுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x