Published : 01 Nov 2017 08:44 AM
Last Updated : 01 Nov 2017 08:44 AM
சென்னையில் செல்லக்கூடாத திசைகள் என்று எட்டுத் திசைகளையும் பதிவிட்டு சமூக வலைதளங்களில் ‘மீம்ஸ்’கள் குவிகின்றன. அதற்கேற்ப ஒருநாள் மழைக்கே மிதக்கத் தொடங்கியிருக்கிறது சென்னை. சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. கூவம், அடையாறு ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. கூடுதலாக மன்னார் வளைகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது என்கிறது வானிலை ஆய்வு மையம். 2015-ம் ஆண்டு வெள்ள நினைவுகளை சுமந்து மக்கள் பதற்றத்துடனே இருக்கிறார்கள்.
ஆனால், பதற்றம் தேவையில்லை. தமிழக வானிலை மையம் மற்றும் ‘வெதர் மேன்’ உள்ளிட்ட பல்வேறு வானிலை ஆராய்ச்சிகள், தமிழகத்தில் பெரிய புயல் மற்றும் வெள்ளம் சூழ வாய்ப்பில்லை என்றே தெரிவித்திருக்கின்றன. ஆனாலும் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் எங்கெல்லாம் வெள்ளம் சூழும் அபாயம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டு அதற்கேற்ப எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் சேதங்களை பெரும்பாலும் தவிர்க்கலாம். பொதுப் பணித்துறை, அண்ணா பல்கலைக் கழகத்தின் பல்வேறு ஆய்வுகள் மற்றும் கடந்த கால வெள்ளங்களின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் இவை.
கூவம், அடையாறு ஆற்றங்கரையில்..
கடந்த காலங்களில் கூவம் ஆற்றில் அண்ணாநகர் பாலம், அமைந்தகரை பாலம், கல்லூரி பாலம், கமாண்டர் இன் சீஃப் பாலம், ஹாரிஸ் பாலம், ஆண்ட்ரியூ’ஸ் பாலம், கால்-லா’ஸ் பாலம், வெல்லிங்டன் பாலம், ஹட்டன் பாலம், வாலாஜா பாலம், நேப்பியர் பாலம் ஆகிய பகுதிகளில் இருந்த குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. எனவே சென்னை மாநகராட்சி, தீயணைப்புத் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் மேற்கண்ட பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அடையாற்றில் நந்தம்பாக்கம் - போரூர் பகுதியில் 1985 மற்றும் 2005-ம் ஆண்டு வெள்ளங்களின்போது 9.75 மில்லியன் கன அடி தண்ணீர் புகுந்தது. ஜாபர்கான்பேட்டையில் 1985-ல் 7.85 மில்லியன் கன அடி தண்ணீர் புகுந்தது. சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் அருகே 1985-ல் 7 மில்லியன் கன அடியும், 2005-ல் 5.6 மில்லியன் கன அடியும் தண்ணீர் புகுந்தது. 2015-ம் ஆண்டும் கிட்டத்தட்ட இதே அளவு தண்ணீர் புகுந்தது. 1985-ல் அடையாறு வடக்குப் பகுதியில் 3.75 மில்லியன் கன அடி தண்ணீர் புகுந்தது. இவை தவிர, சைதாப்பேட்டை ரயில் பாலம், வீராணம் பைப் பகுதி, திருவிக பாலம், கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளிலும் கடந்த காலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேற்கண்ட பகுதிகளில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
36 முன் எச்சரிக்கை இடங்கள்
கடந்த 2005-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் அடிப்படையில் சென்னை நகருக்குள் வெள்ளம் சூழும் இடங்களாக வள்ளுவர் கோட்டம், மிர்சாகிப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், ஃபோர் ஷோர் எஸ்டேட், அடையாறு, கிழக்கு மற்றும் மேற்கு வேளச்சேரி, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், கே.கே.நகர், அசோக் நகர், திருவான்மியூர், மாம்பலம், ரங்கராஜபுரம், பெரம்பூர், முத்தமிழ் நகர், கண்ணதாசன் நகர், எம்.கே.பி.நகர், சத்தியமூர்த்தி நகர், கொளத்தூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், புளியந்தோப்பு, கொசப்பேட்டை, புரசைவாக்கம், சூளை, பெரியமேடு, நம்மாழ்வார்பேட்டை, எஸ்.எஸ்.புரம், அயனாவரம், அண்ணா நகர், வில்லிவாக்கம், அரும்பாக்கம், சூளைமேடு, டிரஸ்ட்புரம், தாண்டவராய சத்திரம் ஆகிய 36 பகுதிகள் வெள்ள அபாய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கழிவு நீர் கால்வாய்கள்
கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் கழிவு நீர் கால்வாய்களில் அடித்துச் சென்றுதான் பலரும் இறந்தார்கள். மழைக்காலங்களில் கூவம் ஆற்றில் 31%, அடையாற்றில் 16%, ஓட்டேரி நல்லா கால்வாயில் 12%, தெற்கு பக்கிம்காம் கால்வாயில் 7%, மத்திய பக்கிம்காம் கால்வாயில் 8%, வடக்கு பக்கிம்காம் கால்வாயில் 16%, ரெட் ஹில்ஸ் உபரி நீர் கால்வாயில் 4%, மாம்பலம் மற்றும் கேப்டன் காட்டன் கால்வாய்களில் தலா 4%, கொடுங்கையூர் புதிய கால்வாய் மற்றும் அம்பத்தூர் ஏரி உபரி நீர் கால்வாய்களில் தலா 1%-ம் கழிவு நீர் ஓடும்.
வெள்ளக் காலங்களில் மேற்கண்ட கழிவு நீருடன் வெள்ள நீர் கலக்கிறது. இதுபோன்ற சமயங்களில் இந்தக் கால்வாய்களில் தண்ணீர் அதிவேகத்தில் பாய்ந்தோடுவதால் கால்வாய் ஓரங்களில் செல்வதையும் அங்கு மலம் கழிப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இங்கெல்லாம் தீயணைப்புத் துறையினரின் தற்காலிக முகாம்கள் அமைப்பதன் மூலம் அசம்பாவிதங்களை தடுக்கலாம்.
சாலைகளில் ஓடும் வெள்ளம்...
கடந்த 2016-ம் ஆண்டுக்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அறிக்கை சென்னையில் மழை நீர் வடிகால்களை சீரமைப்பதில் நடந்த குளறுபடிகளை துல்லியமாக சுட்டிக்காட்டியுள்ளது. அந்த அறிக்கையில், ‘சென்னை மாநகராட்சியுடன் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் அமைப்பு அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறு, கோவளம் ஆகிய நான்கு வடிநிலங்களுடன் இறுதியாக இணையும் வகையிலான திட்டம் ரூ.3,531.43 கோடி மதிப்பீட்டில் கடந்த 2014-ல் உருவாக்கப்பட்டது.
இந்தப் பணிகள் சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால்கள் நில அமைப்பியல், வானிலையியல் மற்றும் நீரியல் ஆய்வின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனாலும் போதிய உருவளவில் இல்லாமலேயே அவை கட்டப்பட்டன. அவை இயற்கையான நீர் வழிகள், நீர் நிலைகளுடன் இறுதியாக இணைக்கப்படவில்லை. ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால்கள் இல்லாமல் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன’ என்று குறிப்பிட்டுள்ளது.
புறநகர் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்துக்கு முக்கியக் காரணம் இந்த குளறுபடிகளே. அப்படியானால் அத்தனை கோடி ரூபாய் என்ன ஆனது என்பதுதான் மக்கள் எழுப்பும் கேள்வி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT