Published : 07 Aug 2023 03:33 PM
Last Updated : 07 Aug 2023 03:33 PM

தமிழகத்தில் 1,000 பேருந்துகள் கொள்முதலுக்காக பெறப்பட்ட ஒற்றை ஒப்பந்தப்புள்ளியை தள்ளுபடி செய்க: அன்புமணி

சென்னை: “தமிழக அரசு 1000 பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக ஒற்றை ஒப்பந்தப்புள்ளியை ஏற்கக் கூடாது; மறு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக தமிழக அரசின் சாலைப் போக்குவரத்து நிறுவனம் 3 ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கைகளை வெளியிட்ட நிலையில், அவை மூன்றுக்கும் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளியை தாக்கல் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒற்றை ஒப்பந்தப்புள்ளிகளை ஆய்வு செய்யக்கூடாது என்ற மரபுக்கு மாறாக , சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விலைப்புள்ளிகளை தமிழக அரசின் சாலைப் போக்குவரத்து நிறுவனம் திறந்து, ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளி ஏற்கப்பட்டால் அது பெரும் அநீதியாக அமையும்.

அரசுத் துறை நிறுவனங்களின் கொள்முதல்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதன் நோக்கமே, அதில் பல நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும்; அவற்றுக்கிடையே போட்டித்தன்மையை ஏற்படுத்தி, நியாயமான விலையில் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்பது தான். ஒரே ஒரு ஒப்பந்தப்புள்ளி மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை தள்ளுபடி செய்து விட்டு மறு ஒப்பந்தப்புள்ளி கோராமல், அதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது ஒப்பந்தப்புள்ளி கோரும் தத்துவத்திற்கே எதிரானது. இது பேருந்துகள் கொள்முதல் செய்யும் நடைமுறை மீது ஐயங்களை ஏற்படுத்தும். அதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும்.

ஒற்றை ஒப்பந்தப்புள்ளி மட்டுமே தாக்கல் செய்யப்பட்டால், அசாதாரண சூழல்களைத் தவிர, மற்ற நேரங்களில் அதை ஏற்கக்கூடாது என்று மத்திய கண்காணிப்பு ஆணையம் வழிகாட்டியிருக்கிறது. ஒற்றை ஒப்பந்தப்புள்ளிகளை ஏற்பதற்கு எதிராக உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பலமுறை தீர்ப்பளித்துள்ளன.

இவை அனைத்தையும் கடந்து பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பேருந்து கொள்முதல் நடைமுறை ஐயங்களுக்கு அப்பாற்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டியது கட்டாயமாகும். அதை உறுதி செய்யும் வகையில், 1000 பேருந்துகள் கொள்முதலுக்காக பெறப்பட்டுள்ள ஒற்றை ஒப்பந்தப் புள்ளியை தள்ளுபடி செய்து விட்டு மறு ஒப்பந்தப்புள்ளி கோரும்படி சாலைப் போக்குவரத்து நிறுவனத்துக்கு தமிழக முதல்வர் ஆணையிட வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x