Published : 07 Aug 2023 03:14 PM
Last Updated : 07 Aug 2023 03:14 PM

“ராஜஸ்தானில் ஒரே நாளில் 17 புதிய மாவட்டங்கள் உருவாக்கம்; தமிழகத்தில் எப்போது?” - ராமதாஸ்

ராமதாஸ் | கோப்புப் படம்.

சென்னை: “ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் 17 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவது எப்போது?” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 17 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அம்மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேசம் (75), மத்தியப் பிரதேசம் (52) ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக மாவட்டங்களைக் கொண்ட மூன்றாவது மாநிலமாக ராஜஸ்தான் உருவெடுத்துள்ளது. நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு ராஜஸ்தான் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

சிறியவையே அழகு என்ற தத்துவத்தின் அடிப்படையில் பெரிய மாவட்டங்களை பிரித்து சிறிய மாவட்டங்களாக்க வேண்டும்; அது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துணை புரியும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் வீதம் 60 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இதை செயல்படுத்த தமிழக அரசு தாமதித்து வரும் நிலையில், ராஜஸ்தான் அரசு முந்திக் கொண்டது. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு ராஜஸ்தான் மாவட்டங்களின் சராசரி மக்கள்தொகை 13 லட்சம். ஆனால், தமிழக மாவட்டங்களின் சராசரி மக்கள்தொகை 19 லட்சமாக உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 25. மாவட்டங்களின் எண்ணிக்கை 50. அதாவது ஒரு மக்களவைத் தொகுதியில் இரு மாவட்டங்கள் அடங்கியுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் ஒரே மாவட்டத்தில் 3 மக்களவைத் தொகுதிகள் பரவிக் கிடக்கின்றன. இந்த அளவுக்கு பரந்து விரிந்த மாவட்ட எல்லைகளை வைத்துக் கொண்டு எவ்வாறு சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும் என்பதை தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

ஆந்திரா, தெலுங்கானா, ஹரியாணா என மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை அமைத்த மாநிலங்கள் அனைத்திலும் வளர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடும் அதிவேக வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் உள்ள பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட வேண்டும். இது குறித்து ஆய்வு செய்து தமிழக அரசுக்கு பரிந்துரைக்க தமிழ்நாடு மாவட்ட மறுசீரமைப்பு ஆணையத்தை தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x