Published : 07 Aug 2023 06:56 AM
Last Updated : 07 Aug 2023 06:56 AM

டைடல்பார்க் - சோழிங்கநல்லூர் இடையே 4 புதிய பாலங்கள்: ரூ.459 கோடியில் மெட்ரோ ரயில் - டிஎன்ஆர்டிசி இணைந்து பணி

சென்னை: ராஜீவ்காந்தி சாலையில் டைடல் பார்க்- சோழிங்கநல்லூர் இடையில் 4 சந்திப்புகளில் ரூ.459.32 கோடியில் புதிய பாலங்களை மெட்ரோ ரயில் நிறுவனம் - தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (டிஎன்ஆர்டிசி) இணைந்து கட்டும் பணியை தொடங்கியுள்ளன.

சென்னை மத்திய கைலாஷில் இருந்து தொடங்கும் பழைய மகாபலிபுரம் சாலையில் (ராஜீவ்காந்தி சாலை), தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சிறுசேரி என அனைத்து பகுதிகளிலும் வர்த்தக நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்துள்ளன.

இதனால், தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்கின்றன. சாலை ஓரளவு அகலமாக இருந்தாலும், இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சாலை சந்திப்புகள் இருப்பதால், வாகன நெருக்கடி மிகுந்து காணப்படுகிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த சாலையில் பயணிப்போர் ஒவ்வொரு சந்திப்பையும் கடந்து செல்வதற்கு காத்திருக்கும் நேரம் அதிகம்.

அதிலும், தற்போது மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான மெட்ரோ ரயில் -3 வது வழித்தடப் பணி நடந்து வருகிறது. இதனால், சாலையின் நடுவில் பெரும் பகுதி தடுக்கப்பட்டு, சாலை மிகவும் குறுகலாகிவிட்டது. அதே நேரம், இந்திரா நகர், டைடல் பார்க் - திருவான்மியூர் சாலை சந்திப்பு பகுதிகளில் ஏற்பட்டு வரும் நெருக்கடியை குறைப்பதற்காக, வாகனங்கள் ‘யு’டெர்ன் எடுத்து செல்லும் வகையில் 2 பாலங்கள் கட்டும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன. இதுதவிர, சர்தார் படேல்
சாலையில் மத்திய கைலாஷ் சந்திப்பில் ஏற்படும் வாகன நெருக்கடியை தவிர்க்க புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஆனால், டைடல்பார்க் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான தரமணி -எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பு மற்றும் எம்ஜிஆர் சாலை- பெருங்குடி சந்திப்பு, துரைப்பாக்கம் ரேடியல் சாலை சந்திப்பு, சோழிங்கநல்லூர் சந்திப்பு பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, சோழிங்கநல்லூர் சந்திப்பு பகுதியிலும் பாலம் அமைக்கவும் வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், தற்போது இந்த 4 சந்திப்புகளிலும், ரூ.459.32 கோடி மதிப்பில் 4 புதிய பாலங்கள் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்து, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவை இணைந்து செயல்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் பாலத்துக்கான வடிவமைப்புகளை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் தற்போது தயாரித்துள்ளது.

அதாவது, மெட்ரோ ரயில் பாதைக்காக தூண்கள் அமைக்கும் போதே, பாலத்துக்கான தூண்களையும் அமைத்து இரு பணிகளையும் ஒரே நேரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதன்படி, இந்த சந்திப்புகளில் இரண்டு அடுக்கு பாலம் அமையும், முதல் அடுக்கு மேம்பாலத்தில் வாகனங்கள் செல்லும். 2-ம் அடுக்கில் மெட்ரோ ரயில் செல்வதற்கான பாலம் அமையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரூ.128.32 கோடியை செலவிடுகிறது. மீதமுள்ள ரூ.331 கோடியை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் வழங்குகிறது. இதில் ரூ.157.26 கோடியை சாலைமேம்பாட்டு நிறுவனம் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கி, அந்த நிறுவனம் பாலப்பணிகளுக்காக செலவிடுகிறது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘4 சந்திப்புகளிலும் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. மெட்ரோ ரயில் மற்றும் மேம்பால தூண்களுக்காக பொதுவான அடித்தளம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. பாலத்துக்கான கட்டமைப்பு வடிவமைப்பை மெட்ரோ நிறுவனம் செய்துள்ளது. மெட்ரோ பணிகளுடன் சேர்த்து இப்பணிகளும் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x