Published : 07 Aug 2023 05:29 AM
Last Updated : 07 Aug 2023 05:29 AM
சென்னை: அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்த பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இவற்றில் 25 ரயில் நிலையங்கள் தெற்கு ரயில்வேக்கு உட்பட்டவை. இந்த நிலையங்கள் ரூ.616 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளன.
நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில், ரயில் நிலையங்களை மேம்படுத்த அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், மொத்தம் 1,309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் ரூ.24,470 கோடி செலவில் மேம்படுத்தப்படுகின்றன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. டெல்லியில் இருந்து காணோலி வாயிலாக, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் உள்ள 25 ரயில் நிலையங்கள், ரூ.616 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளன. தமிழகத்தில் 18 நிலையங்களும், கேரள மாநிலத்தில் 5, கர்நாடகா, புதுச்சேரியில் தலா ஒரு நிலையமும் மேம்படுத்தப்பட உள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 62 நிலையங்கள், கேரளாவில் 27 நிலையங்கள், புதுச்சேரியில் 2 நிலையங்கள், கர்நாடகா, ஆந்திராவில் தலா ஒரு நிலையம் என மொத்தம் 93 நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள் மேம்பாடு: இதில், ரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவுவாயில்கள் சீரமைப்பு, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள், மல்டி லெவல் பார்க்கிங் வசதி, சிசிடிவி கேமரா, வை ஃபை வசதி, இயற்கைக் காட்சிகள், தோட்டம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும்.
தமிழகத்தில் முதல்கட்டமாக, செங்கல்பட்டு (ரூ.18 கோடி), பெரம்பூர் (ரூ.15 கோடி), கூடுவாஞ்சேரி (ரூ.21 கோடி), திருவள்ளூர் (ரூ.16 கோடி), திருத்தணி (ரூ.11 கோடி), கும்மிடிப்பூண்டி (ரூ.17 கோடி), அரக்கோணம் (ரூ.22 கோடி), ஜோலார்பேட்டை (ரூ.16 கோடி),
சேலம் (ரூ.45 கோடி), கரூர் (ரூ.34 கோடி), திருப்பூர் (ரூ.22 கோடி), போத்தனுார் (ரூ.24 கோடி),தென்காசி (ரூ.17 கோடி), விருதுநகர்(ரூ.25 கோடி), மயிலாடுதுறை (ரூ.20 கோடி), தஞ்சாவூர்(ரூ.23 கோடி), விழுப்புரம் (ரூ.24 கோடி), நாகர்கோவில் (ரூ.11 கோடி) ஆகிய 18 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பெரம்பூரில் விழா...: அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ், சென்னை ரயில்வே கோட்டத்தில் பெரம்பூர் உள்ளிட்ட 8 நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, அந்தந்த ரயில் நிலையங்களில் நேற்று நடைபெற்றன. பெரம்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT