Published : 07 Aug 2023 06:51 AM
Last Updated : 07 Aug 2023 06:51 AM

ஆன்மிகத்துக்கு எதிராக யாராலும் ஒருபோதும் வெற்றி பெற முடியாது - ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து

திருப்பூரில் நடைபெற்ற உலக சமுதாய சேவா சங்க கிராம சேவை திட்ட தொடக்க விழாவில் பேசிய ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணன். படம்: எம்.நாகராஜன்

திருப்பூர்: ஆன்மிகத்துக்கு எதிராக யாராலும் வெற்றி பெற முடியாது என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

திருப்பூரை அடுத்த கணக்கம்பாளையம் கிராமத்தில் உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற 300-வது கிராமிய சேவை திட்டம் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

உலகம் வெப்பமயமாவதை தடுக்க மரங்கள் நடுவதுதான் முக்கிய தீர்வாகும். கடந்த மாதம் உலகத்திலேயே மிக அதிகமான வெப்பம் நிலவியதாக தெரியவந்துள்ளது. எதிர்மறையான சூழலை கூட நேர்மறையாக மாற்றிக்கொண்டு வெற்றி பெறுபவரே உண்மையான வீரர்.

அழிந்துவரும் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்துக்கு புத்துயிர் அளிக்கும் கலைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள். குழந்தைகளுக்கு சிறு வயது முதலே யோகா பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு மனிதன் தனது மனதை ஆள தெரிந்துவிட்டால் அவரே சிறந்தவர். மனம் அமைதி இல்லை என்றால் மற்றவர்களின் தவறு மட்டுமே தெரியும்.

ஆன்மிகத்துக்கு எதிராக யாராலும் வெற்றி பெற முடியாது. கடவுள் இல்லை என்று கருணாநிதியை விட வலுவாக பேசியவர் யாருமில்லை. ஆனால் அவரே யோகாவை முழுவதுமாக ஏற்றுக்கொண்டார். இறைவனை எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம். பணம், பதவி வரும்போது பணிவு வரவேண்டும். அந்த நிலை வந்தவர்களுக்கு வெற்றி நிலைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

அமைப்பின் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் தலைமை வகித்து பேசும்போது, “உலக சமுதாய சேவா சங்கம் 1958-ல் தொடங்கப்பட்டது. இது மடமாக அன்றி கல்விக் கூடமாகவோ, பல்கலைக்கழகமாகவோ மாற வேண்டும் என விரும்பினார் வேதாத்ரி மகரிஷி.

அவரது விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். இது தன்னலமற்றவர்களால் சாத்தியம் ஆனது. யோகா மற்றும் ஆன்மிக கல்வி மையத்தால் பல ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர்.

புண்ணியம் வேண்டும் என்றால் அற வாழ்க்கை வாழ வேண்டும். அறம் தாழ்ந்து கொண்டும், லஞ்சம்பெருகிக்கொண்டும் வருவது சமூகத்துக்கு கேடு. தர்மம் தழைக்க வேண்டும். நம்மை மேம்படுத்திக்கொள்ள முறையான உடற்பயிற்சி அவசியம்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார், திருநெல்வேலி தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், ஆழியாறு அறிவுத் திருக்கோயில் அறங்காவலர் வி.எம்.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட இயக்குநர் பி.முருகானந்தம் விளக்க உரையாற்றினார். முன்னதாக, துணைத்தலைவர் வி.சுந்தரராஜன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x