Published : 05 Nov 2017 12:30 PM
Last Updated : 05 Nov 2017 12:30 PM
நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட போடிநாயக்கனூர், பொட்டிரெட்டிப்பட்டி, எருமப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் மண் பாண்டங்கள் தயாரிப்பில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். நேர்த்தியான முறையில் இங்கு தயாரிக்கப்படும் மண் பாண்டங்களை வாங்க மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அலுமினியம், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்களின் வருகைக்கு முன்பு, களி மண்ணால் செய்யப்பட்ட பாண்டங்களையே மக்கள் பயன்படுத்தி வந்தனர். மளிகைப் பொருட்கள் முதல் உணவு தயாரிப்பு வரை மண் பாண்டங்களே பயன்பாட்டில் இருந்தது. கிராமம், நகரம் என வேறுபாடின்றி மண் பாண்டங்ளை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இதனால், மண் பாண்டங்கள் தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் போதிய வருவாய் கிடைத்து வந்தது. கால மாற்றம் காரணமாக மண் பாண்டங்களுக்கான இடங்களை அலுமினியம், எவர்சில்வர், பிளாஸ்டிக் போன்றவை ஆக்கிரமித்துக் கொண்டன.
இதனால், மண் பாண்டங்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்ட போதிலும், இதன் மகிமை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக கிராமப்புறங்களில் இன்றும் மண் பாண்டங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. அதேவேளையில் மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்களில் உணவுப் பொருட்கள் தயாரிப்பதும், சாப்பிடுவதும் ஆரோக்கியமானது என்பதால் நகர்புற மக்களிடமும், மண் பாண்டங்கள் மீதான ஆர்வம் மீண்டும் உயிர் பெற்று வருகிறது.
கார்த்திகை தீபம் போன்ற பண்டிகை நாட்களில் களி மண்ணால் செய்யப்பட்ட விளக்குகளே இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை போடிநாயக்கனுார், எருமப்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி, பவித்திரம் உள்ளிட்ட கிராமங்களில் மண் பாண்டம் தயாரிப்பு பணியில் கணிசமான அளவில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கார்த்திகை தீபம் சமயத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. நேர்த்தியான தயாரிப்பால் இங்கு தயாரிக்கப்படும் மண் பாண்டங்களை வாங்க மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பொட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த மண் பாண்ட தயாரிப்பாளர் எம். பொன்னுசாமி கூறுகையில், 'ஆண்டு முழுவதும் அகல் விளக்கு தயாரிப்பு பணி நடைபெறுகிறது. ஒரு லிட்டர் வரை எண்ணெய் ஊற்றக்கூடிய விளக்கு, ஐந்து முக விளக்கு என பல வகைகளில் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. விளக்குகளின் அளவிற்கு தகுந்தாற்போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இங்கு தயாராகும் மண்பாண்டங்கள் நாமக்கல் மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி அருகே உள்ள துறையூர், கரூர் மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. வருவாய் குறைவு காரணமாக பலர் மாற்றுத் தொழிலை நாடிச் செல்கின்றனர். இதைத் தவிர்க்க இத்தொழிலில் உள்ள குறைபாடுகளை களையவும், வருவாயை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களால்
வருவாய் குறைவு
சமீப ஆண்டுகளாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அனைத்து பயன்பாட்டிற்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன்காரணமாக மண் பாண்டங்களின் தேவை குறைந்து வருகிறது. பயன்பாடு குறைவு காரணமாக வேலையின்மை, வருவாய்குறைவு போன்றவை ஏற்படுகிறது.
பொங்கல், கார்த்திகை தீபம் போன்ற பண்டிகை காலங்களில் மட்டுமே பானை மற்றும் அகல் விளக்குகளின் தேவை அதிகமாக உள்ளது. மற்ற காலங்களில் சொற்ப அளவிலேயே மண் பாண்டங்கள் பயன்பாடு உள்ளது.
விளம்பரப்படுத்தினால்
பயன்பாடு அதிகரிக்கும்
மண் பானை சமையல் என்ற பெயரில், உணவு விடுதிகள் தொடங்கப் படுகின்றன. அவற்றை மக்களும் அதிகம் நாடிச் செல்கின்றனர்.
குறிப்பாக கோடை காலங்களில் மண் பானை பயன்பாடு அதிமாக இருக்கும். குளிர்சாதன பெட்டி வந்தாலும் இன்றளவும் கோடை காலங்களில் மண் பானையை மக்கள் அதிகம் வாங்கிச் செல்கின்றனர். .
மண் பாண்டங்களின் பயன்களை விளம்பரப்படுத்தினால், வரும் காலங்களில் இதற்கான வரவேற்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் மண் பாண்ட தொழில் அழிவை நோக்கி நகர்வது தவிர்க்கப்படுவதுடன், வருவாய் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
அரசு நலத்திட்ட உதவி
வழங்க வேண்டும்
மண் பாண்டங்கள் தயார் செய்வதற்குரிய மண் சொந்த நிலங்களில் வைத்திருப்போரிடம் இருந்து விலை கொடுத்து மண் எடுத்து வரப்படுகிறது.
அவ்வாறு கொண்டுவரும் போது அதிகாரிகள் நெருக்கடி அளிக்கின்றனர். இதை தவிர்க்க அரசு மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு வழங்குவதுபோல், மண் பாண்ட தொழிலில் ஈடுபடுவோரின் குழந்தைக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை போன்றவற்றை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மண் பானை தயாரிக்க இலவச மின்சாரம், இதற்கான கருவிகளை மானிய விலையில் வழங்குவது போன்ற நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் பயனாக இருக்கும்’, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT