Published : 11 Nov 2017 11:31 AM
Last Updated : 11 Nov 2017 11:31 AM
மதுரை அருகே பட்டதாரி இளைஞர் ஒருவர் விபத்தில் ஒரு கையை இழந்து விட்டாலும் மனமுடைந்து போகாமல், தமது பாரம்பரியத் தொழிலான மண்பாண்டத் தயாரிப்பு தொழிலை மேற்கொண்டு விதவிதமான மண்பாண்ட பொருட்களை தயாரித்து தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்புகிறார்.
முழு உடல் நலத்துடன் உள்ள மனிதர்களே சிறு கஷ்டம் வந்தாலும் சோர்ந்துபோய் வீட்டில் முடங்கி விடுகிறார்கள். ஆனால், மதுரை அருகே பரவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் வேல்முருகன் (32), தனது தன்னம்பிக்கையால், இவர்களில் இருந்து வேறுபட்டு தனித்து நிற்கிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. மதுரை தனியார் கல்லூரியில் பிகாம் படித்துவிட்டு, ரப்பர் கம்பெனியில் வேலை பார்த்தபோது இயந்திரத்தில் சிக்கி ஒரு கை துண்டானது. இதனால் மனம் துவண்டுபோய் மூலையில் உட்கார்ந்து விடாமல் தங்களது குடும்ப பாரம்பரியத் தொழிலான மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பு தொழிலில் முழு முயற்சியோடு களமிறங்கினார்.
ஒற்றை கையால் அகல் விளக்குகள், மண் பானைகள், உண்டியல்கள், மண் தொட்டிகள், அலங்காரப் பொருட்களை வேகமாக கலை நயத்துடன் தயாரித்து பார்ப்பவர்களை வியப்படைய வைக்கிறார். இவரே மண்ணை குழைத்து, மண்பாண்ட பொருட்களை தயாரிக்கிறார்.
சீசனுக்கு தகுந்தாற்போல பொருட்கள்
இதுகுறித்து வேல்முருகன் கூறியதாவது: குருவிக் கலயம் (லவ் பேட்ஸ் கலயம்), மேல்மருவத்தூர் கலயம், அனைத்து விதமான விளக்குகள், கோயில் கும்பக் கலயம், சமையல் பானைகள், பொங்கல் பானை, தீபாவளி பட்டாசு வெடிப்பதற்கான மத்தாப்பு கலயம், திருமண பானைகள், கிறிஸ்தவர்கள் உண்டியல், ஈமச்சடங்கு பானைகள் வரை 20 வகையான பொருட்களை தயாரிக்கிறேன்.
ஒவ்வொரு சீசனுக்கு ஏற்ற மாதிரி பொருட்களை தயாரித்து விற்பனைக்கு அனுப்புகிறேன். தற்போது திருகார்த்திகை விழா நெருங்குவதால், அதற்கான அகல் விளக்குகளை தயாரித்து வருகிறேன்.
வருவாய் குறைவுதான்
திருக்கார்த்திகை சீசன் முடிந்ததும், பொங்கல் பானைகள் தயாரிக்க ஆரம்பித்துவிடுவேன். 5 ஆயிரம் ரூபாய்க்கு மண் அடித்தால் 30 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை தயாரிக்கலாம். மின் செலவு, பொருட்களை காய வைத்து பராமரிப்பது வரையிலான உழைப்பு, விற்பனைக்கு அனுப்புவது என பல சிரமங்கள் இருக்கின்றன. செலவெல்லாம் போக ஒரு நாளைக்கு 200 ரூபாய் கிடைத்தாலே அதிகம். அதனால், மண்பானை தயாரிப்பு தொழில் போக, வீட்டுக்கு சென்றதும் பகுதி நேரமாக கம்ப்யூட்டர் வேலை செய்கிறேன்.
அடுத்ததாக அரசு வேலைக்கும் முயற்சித்து வருகிறேன். ரயில்வே, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, ஒரு கை வேகவேகமாக சுழல்கிறது. 10-க்கும் மேற்பட்ட அழகழகான அகல் விளக்குகள் தயாராகி நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.
வேல் மைதீனாக மாறிய வேல்முருகன்
‘‘இரண்டு கையும் நல்லாயிருந்தபோது ஒற்றைக் கையால் கார், பைக், ஜீப் எல்லா வண்டியும் ஓட்டுவேன். ரப்பர் கம்பெனியில் வேலை பார்த்தபோது விபத்தில் கை துண்டானது.
ஆஸ்பத்திரிக்கு பணத்தை கொடுத்த கம்பெனிக்காரங்க ஒரு கை இல்லாததால் வேலைய விட்டு அனுப்பிட்டாங்க. வாழ்க்கையே இருண்டு போச்சுன்னு வீட்டோட முடங்கி கிடந்தேன்.
என் நண்பன் மைதீன் என்பவன்தான், உன்னால முடியும்னு உற்சாகப்படுத்தி மீண்டும் கார், பைக் ஓட்டச் சொன்னான். அதேமாதிரி என்னால் ஓட்ட முடிந்தது. அவன் கொடுத்த ஊக்கத்தாலும், வழிகாட்டுதலாலும் எங்கள் குடும்பத் தொழிலில் நம்பிக்கையோடு இறங்கினேன். அந்த நன்றியை மறக்காமல் எனது பெயரை வேல்மைதீன்னு மாத்திட்டேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT