Published : 06 Aug 2023 06:02 PM
Last Updated : 06 Aug 2023 06:02 PM
சென்னை: கை அகற்றப்பட்டதால், உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கை அகற்றப்பட்டதால், குழந்தை உயிரிழந்த விவகாரத்தில்,அரசு செய்த தவறுக்கு பிராயசித்தமாக, அக்குழந்தையின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஏனென்றால், குழந்தையின் உயிர் திரும்ப வரப்போவது கிடையாது. எனவே, அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தை விசாரிக்க அரசு ஒரு குழுவை அமைக்கிறது. அந்த குழு யார் என்று பார்த்தால், அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள்தான் அந்தக் குழுவில் இடம்பெற்றனர்.
ஒரே மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்தால், எப்படி உடன் பணியாற்றுபவரை காட்டிக் கொடுப்பார்? அவர் தவறு செய்தவரை காட்டிக் கொடுக்கமாட்டார். அதனால்தான், அதிமுக இதுகுறித்து அன்றைக்கே கேள்வி எழுப்பியது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், வெளியே இருக்கும் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களைக் கொண்டு குழு அமைக்கவும், இந்த விவகாரத்தின் உண்மையை விளக்கவும் அதிமுக வலியுறுத்தியது" என்று அவர் கூறினார்.
முன்னதாக,பாக்டீரியா தொற்றால் ரத்தத்தில் நச்சுகள் கலந்ததால் ஏற்பட்ட பாதிப்பால், கை அகற்றப்பட்ட நிலையில் எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்ததாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. | வாசிக்க > ரத்தத்தில் நச்சுகள் கலந்ததால் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு: அரசு மருத்துவமனை விளக்கம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...