Published : 06 Aug 2023 05:19 PM
Last Updated : 06 Aug 2023 05:19 PM
புதுச்சேரி: குடியரசுத் தலைவர் புதுச்சேரிக்கு வருவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து சீனியர் எஸ்பி பிரிஜேந்திரகுமார் யாதவ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகை தருகிறார். அவர் வரும் வழியில் பாதுகாப்பு காரணம் கருதி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக பொதுமக்களுக்கு மாற்றுப் பாதையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது. நாளை (ஆக.7) காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையில் லாஸ்பேட்டை விமான நிலையச் சாலை முதல் லதா ஸ்டீல் ஹவுஸ் சந்திப்பு வரை கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள், பேருந்துகள் மற்றும் பள்ளி பேருந்துகள் உள்ளிட்டவை செல்ல அனுமதியில்லை.
அதேபோல காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரையில் திண்டிவனம் வழியாக புதுச்சேரி நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் கோரிமேடு கனரக வாகன சந்திப்பு சாலை வழியாக, மேட்டுப்பாளையம் சந்திப்பு, குண்டுசாலை சந்திப்பு, விழுப்புரம் சாலை, இந்திரா காந்தி சிலை சதுக்கம், நெல்லித்தோப்பு வழியாக புதுச்சேரி பேருந்து நிலையத்துக்கு திருப்பிவிடப்படும்.
சென்னையில் இருந்து இசிஆர் வழியாக புதுச்சேரி நோக்கி வரும் கனரக வாகனங்கள், பேருந்துகள் என அனைத்து வாகனங்களும் புத்துப்பட்டு ஐயனாரப்பன் கோவில் சந்திப்பு வழியாகத் திரும்பி செல்ல வேண்டும். சென்னையிலிருந்து திண்டிவனத்துக்கு ராஜிவ்காந்தி சிலை சதுக்கம் வழியாகச் செல்லும் வாகனங்கள் சாமிபிள்ளைத் தோட்டம் அருகே வலது பக்கம் திரும்பி தமிழ் ஒலி முதன்மைச் சாலை வழியாக லாஸ்பேட்டை சாலை, கல்லூரி சாலை, நாவற்குளம் வழியாகச் சென்று கோரிமேட்டை அடையலாம்.
மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையில் இந்திராகாந்தி சிலை சதுக்கத்திலிருந்து 100 அடிச்சாலை மரப்பாலம் வழியாக கடலூர் செல்லும் வாகனங்களுக்கு அந்த வழியில் அனுமதியில்லை. ஆகவே, அவ்வழியில் செல்லவேண்டிய வாகனங்கள் இந்திராகாந்தி சிலை சதுக்கத்திலிருந்து விழுப்புரம், வில்லியனூர் சாலையைப் பயன்படுத்தி கடலூர் செல்ல வேண்டும்.
அதேபோல வெங்கட சுப்பா ரெட்டியார் சதுக்கம் சந்திப்பிலிருந்து புஸ்ஸி வீதி நோக்கி அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதியில்லை. அவ்வழி செல்லவேண்டிய வாகனங்கள் நெல்லித்தோப்பு சந்திப்பில் இருந்து திருவள்ளுவர் சாலை வழியாகச் செல்லவேண்டும். அதேபோல சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி நோக்கி வரும் வாகனங்கள் அஜந்தா சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, அண்ணாசாலை, வள்ளலார்சாலை, திருவள்ளுவர் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
அதேபோல் பட்டாணிக்கடை சந்திப்பு முதல் அண்ணா சாலை வழியாக ஒதியஞ்சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அவை பட்டாணிக்கடை சந்திப்பிலிருந்து காமராஜர் சாலை வழியாக செல்ல வேண்டும். கடலூர் சாலை வழியாக புதுச்சேரி நோக்கி வரும் வாகனங்கள் முதலியார்பேட்டை வழியாக செல்ல அனுமதியில்லை. மரப்பாலம் சந்திப்பிலிருந்து இடதுபக்கம் திரும்பி 100 அடி சாலையில் இந்திரா காந்தி சிலை சதுக்கம் செல்ல வேண்டும். அதேபோல கன்னிக்கோயில் சந்திப்பிலிருந்து இடது பக்கம் திரும்பி அரங்கனூர், கரிக்கலம்பாக்கம், உருவையாறு, வில்லியனூர் வழியாக புதுச்சேரிக்குள் வரலாம்.
கரிக்கலாம்பாக்கத்திலிருந்து தவளக்குப்பம் செல்லும் வாகனங்களும், கரிக்கலாம்பாக்கத்திலிருந்து பாகூர் அல்லது உருவையாறு, வில்லியனூர் வழியாகவே செல்ல வேண்டும். அதே வழியில் புதுச்சேரிக்குள் வரும் அனைத்து வாகனங்களும் முருகம்பாக்கம் சந்திப்பில் இடது புறம் திரும்பி கொம்பாக்கம் வழியாகச் செல்லவேண்டும்.
வாகனமில்லா பகுதிகள்: புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் வரும் நிலையில் கடற்கரைச் சாலை, துய்மா வீதி, செயின்ட் லூயிஸ் வீதி, புஸ்ஸி வீதி, ஆம்பூர் சாலை, நேரு வீதியில் ஆம்பூர் சாலை முதல் செயின்ட் வீதி வரை, மணக்குள விநாயகர் கோயில் முதல் ரங்கப்பிள்ளை வீதி மற்றும் துப்புய் வீதி வரை, பிரான்சூவா மார்த்தேன் வீதியில் ரங்கப்பிள்ளை வீதி முதல் துப்புய் வீதி வரையில் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை." இவ்வாறு புதுச்சேரி போக்குவரத்து சீனியர் எஸ்பி பிரிஜேந்திரகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT