Last Updated : 06 Aug, 2023 05:10 PM

7  

Published : 06 Aug 2023 05:10 PM
Last Updated : 06 Aug 2023 05:10 PM

அண்ணாமலை நடைபயணத்தின் முதல் பொதுக்கூட்டம் ரத்து - தொண்டர்கள் அதிருப்தி

மதுரை: பாஜக மாநிலத் தலைவர் நடைபயணம் இடையே ஏற்பாடு செய்த முதல் பொதுக்கூட்டம் ரத்தானதால் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்ளும் நோக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 28ம் தேதி ராமேசுரவத்தில் அண்ணாமலையின் நடைபயணத் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நடைப்பயணம் செய்தார். இப்பயணத்தின்போது, குறிப்பிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் பொதுக்கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு, இதில் தலா ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பது என்று திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ராமேசுவரத்தில் பயணம் தொடங்கினாலும், தென்மாவட்டங்களை மையமாகக் கொண்டு மதுரை பழங்காநத்தம் பகுதியில் நாளை (ஆக.,7) பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரையில் 4ம் தேதி நடைபயணத்தை மேலூரில் தொடங்கிய அண்ணாமலை, தொடர்ந்து நேற்று முன்தினம் வரை மதுரை கிழக்கு தொகுதியில் பயணம் மேற்கொண்டார். ஏற்கனவே திட்டமிட்டபடி, மதுரையில் அண்ணாமலை இன்று ஓய்வு எடுத்து விட்டு, மதுரை மேற்கு தொகுதியில் நாளையும்(ஆக. 7), 8ம் தேதி திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதியிலும் நடைபயணம் முடிந்த பின், மாலை பழங்காநத்தம் பகுதியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் பங்கேற்பதாக இருந்தது.

இந்நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் நாளை (ஆக., 8) செல்வதாக இருந்த திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிக்கு முன்கூட்டியே இன்று பெயரளவுக்கு சென்றுவிட்டு மதியம் விமானத்தை பிடித்து, திடீரென சென்னை சென்று, டெல்லிக்கு போவதாக கூறப்படுகிறது. மேலும், மதுரை பொதுக் கூட்டமும் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே சமீபத்தில் மதுரையில் செய்தியாளர்களிடம் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசும்போது, ''பாஜக தலைவர் அண்ணாமலை எங்களுக்கு ஒரு பொருட்டு அல்ல. பிரதமர், அமித்ஷாவிடம் மட்டுமே பேசுவோம்,'' என்றார். இதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலையும், ''அரசியல் விஞ்ஞானி (செல்லூர் ராஜூ) சொல்வதற்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை,’ என, கூறினார். இதைத் தொடர்ந்து அண்ணாமலை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிமுகவினர் காரசார கருத்துக்களை பதிவிடுகின்றனர். பதிலுக்கு பாஜகவினரும் எதிர் வினையாற்றுகின்றனர். இச்சூழலில் அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டிருப்பது கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக நிர்வாகிகள், தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நிர்வாகிகள் சிலர் கூறியது: "தமிழ்நாட்டில் இந்த நடைபயணம் எழுச்சிபெறும் என எதிர்பார்க்கிறோம். பயணத்தின்போது, குறிப்பிட்ட மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும், மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் விதமாகவும் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தென் மாவட்டங்களை மையப்படுத்திய முதல் பொதுக்கூட்டம் தற்போது திடீரென ரத்து செய்யப்பட்டு இருப்பது, கட்சியினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா முதலில் 6ம் தேதியை கொடுத்து இருந்ததாகவும், பிறகு அது 7ம்தேதி என மாற்றப்பட்டதாகவும் கூறுகின்றனர். ஆனாலும், அவர் பங்கேற்க முடியாத சூழலில் கூட்டமே ரத்து செய்யப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட முதல் பொதுக்கூட்டம் திடீர் என ரத்து செய்யப்பட்டிருப்பது கட்சியினர் இடையே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தும்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x