Published : 06 Aug 2023 03:51 PM
Last Updated : 06 Aug 2023 03:51 PM

என்எல்சியில் வடமாநிலத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது ஏன்? - என்எல்சி விளக்கம்

கோப்புப்படம்

நெய்வேலி: ராஜஸ்தானில் உள்ள என்எல்சி பர்சிங்சார் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தைக் கருத்தில் கொண்டு, என்எல்சி திட்டங்களுக்காக நிலம் வழங்கியவர்கள் பிரிவின் கீழ் 28 நபர்களுக்கு வேலை வழங்கப்பட்டது என்று என்எல்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக என்எல்சி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: "நேற்று முதல், என்எல்சி இந்தியா நிறுனத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், 862 பேர் கொண்ட நிலம் மற்றும் குடியிருப்பு வீடு கொடுத்தவர்கள் பட்டியலில், 28 பேருக்கு 1992 முதல் 2012 வரையிலான காலப்பகுதியில் தவறாக வேலை வழங்கப்பட்டுள்ளதாக பத்திரிகை மற்றும் மின்னணு ஊடகங்களில் வேண்டுமென்றே தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

வரிசை எண்கள் 835 முதல் 862 வரையிலான பெயர்களைக் கொண்ட அந்த 28 நபர்களுக்கு ராஜஸ்தானில் உள்ள என்எல்சி பர்சிங்சார் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தைக் கருத்தில் கொண்டு, என்எல்சி திட்டங்களுக்காக நிலம் வழங்கியவர்கள் பிரிவின் கீழ் வேலை வழங்கப்பட்டது என்று என்எல்சி இந்தியா தெளிவுபடுத்துகிறது.

என்எல்சி இந்தியா ஒரு இந்திய அளவிலான நிறுவனமாக இருப்பதைக் கருத்தில் கொள்ளாமலும், உண்மை நிலையை தவறாகக் கருதி, தொடர்பில்லாத நபர்களுக்கு நிலம் வழங்கியவர்கள் பிரிவின் கீழ் என்எல்சி இந்தியா நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்கியதாகவும், பொது மக்களிடையே நிறுவனத்தின் நன்மதிப்பைக் கெடுக்கும் நோக்கத்தில், தவறான செய்தியைப் பரப்பியிருக்கக்கூடும் என தோன்றுகிறது. மேலும், என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்து வரும் தற்போதைய பதட்டமான சூழலை மோசமாக்குவதற்காகவும் இந்த தகவல் பரப்பப்பட்டதாகவும் தெரிகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மைத் தன்மையை தெளிவுப்படுத்தும் நோக்கில், மேற்குறிப்பிட்ட நிலம் வழங்கிய நபர்கள் 28 பேர்கள் பற்றிய முழுமையான விவரங்கள் மற்றும் ராஜஸ்தானில் உள்ள என்எல்சி பர்சிங்சார் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களில் பணியமர்த்திய விபரங்கள் அடங்கிய பட்டியலையும் என்எல்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வெளியிட்டிருந்த அறிக்கையில், "என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 ஆயிரத்துக்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படாத நிலையில், நிலமே வழங்காத வட இந்தியர்களுக்கு என்எல்சி வேலை வழங்கியது எப்படி? அது தொடர்பான தகவல்களை வழங்க மறுப்பது ஏன்? இதன் பின்னணியில் ஊழலும், முறைகேடுகளும் நடந்துள்ளனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும்", என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > என்எல்சிக்கு நிலமே வழங்காத வட இந்தியர்களுக்கு வேலை வழங்கியது எப்படி?- அன்புமணி ராமதாஸ் கேள்வி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x