Published : 06 Aug 2023 03:24 PM
Last Updated : 06 Aug 2023 03:24 PM
சென்னை: "தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பு கடுமையாக உயர்த்தப்பட்டது; அதன்பின் 20 வகையான சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அப்பாவி மக்களை கசக்கிப் பிழிவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு கட்டணம் இரு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை நிலத்தின் மதிப்புக்கு 9% பதிவுக்கட்டணமும், கட்டுமானத்துக்கு 4% பதிவுக்கட்டணமும் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி இரண்டுக்கும் சேர்த்து மொத்தமாக 9% பதிவுக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு இதுவரை அதிகபட்சமாக ரூ.1.15 லட்சம் வரை மட்டுமே பதிவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.2.25 லட்சம் செலுத்த வேண்டும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களால் தாங்க முடியாத கட்டண உயர்வு ஆகும்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வீடு என்பது பெருங்கனவு ஆகும். எவரும் வீட்டை தங்களின் சொந்தப் பணத்தில் இருந்து வாங்குவதில்லை. வங்கிகளில் கடன் வாங்கி, அதை வாழ்நாள் முழுவதும் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தான் வாங்குகின்றனர். வீட்டுக்கடனுக்கான வட்டி கடுமையாக அதிகரித்திருப்பதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வீடு வாங்குவது பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது பதிவுக் கட்டணமும் இரு மடங்கு வரை உயர்ந்தால், அவர்களின் வீட்டுக் கனவு சிதைந்து விடும். இது நியாயமற்றது!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பு கடுமையாக உயர்த்தப்பட்டது; அதன்பின் 20 வகையான சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அப்பாவி மக்களை கசக்கிப் பிழிவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீட்டுக்கனவை நனவாக்க வேண்டியது அரசின் கடமைகளில் முதன்மையானது ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டிய அரசு, அதற்கு எதிரான திசையில் பயணிக்கக் கூடாது. இதை மனதில் கொண்டு கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு கட்டணத்தை இதுவரை வசூலிக்கப்பட்ட அளவிலேயே இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT