Published : 06 Aug 2023 02:54 PM
Last Updated : 06 Aug 2023 02:54 PM

மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பதில் தீவிரம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: "தமிழகத்தின் வரலாறு, எதிர்கால இலக்கு, பொருளாதார வளர்ச்சி, தொழில்சார் சிந்தனைகளுக்கு ஏற்ப, தமிழக அரசு தனித்துவமான “மாநிலக் கல்விக் கொள்கை” வடிவமைப்பதில் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) நடைபெற்றது. இதில், இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "கடந்த 165 ஆண்டுகளாகத் தென்னிந்தியாவில் மட்டுமில்லாமல், நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கு நிலையான பங்களிப்பை சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. அந்தக் காலத்தில் இருந்தது சென்னைப் பல்கலைக்கழகம் மட்டும்தான். நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் சென்னைக்கு வெளியே சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இன்றைய தினம் தமிழகத்தில் மாநில அரசின் சார்பில் மொத்தம் 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன. தமிழகம் என்பது இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக இருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகத்தில் மட்டுமே 18 நிறுவனங்கள் உள்ளன. தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21-ம், தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32-ம், தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில் 10-ம் தமிழகத்தில் உள்ளன. தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35-ம், தலைசிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் 11-ம், 100 மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 8-ம் தமிழகத்தில் உள்ளன. 40 பல்மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 9-ம், 30 சட்டக் கல்லூரிகளில் 2 -ம், 30 கட்டடக் கலைக் கல்லூரிகளில் 6-ம் தமிழகத்தில் உள்ளன.

தமிழகத்தின் வரலாறு, எதிர்கால இலக்கு, பொருளாதார வளர்ச்சி, தொழில்சார் சிந்தனைகளுக்கு ஏற்ப, தமிழக அரசு தனித்துவமான “மாநிலக் கல்விக் கொள்கை” வடிவமைப்பதில் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. “தமிழக முதல்வரின் புத்தாய்வுத் திட்டம்” என்ற புதிய சீர்மிகு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிக்குள் நுழையும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் விதமாக “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்” எனும் புதுமைப்பெண் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி பெண்கல்வியை ஊக்குவித்து வருகிறோம். தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சார்ந்த மாணவர்கள் போட்டித் தேர்வுகள், ஆட்சிப் பணித் தேர்வுகள், திறன்சார்ந்த தேர்வுகளுக்குத் தங்களைத் தயார் செய்யும் பொருட்டு மதுரையில் “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகிறது.

பட்டம் வாங்குவதோடு உங்களது படிப்பு முடிந்து விடுவது இல்லை. ஒரே பட்டத்துடன் நிறுத்திவிடாதீர்கள். தொடர்ந்து படியுங்கள். தகுதியான வேலை கிடைத்த பிறகு படிப்பதை நிறுத்திவிடாதீர்கள். யாராலும் பறிக்க முடியாத சொத்து என்பது கல்வியறிவு தான். அது அறிவியல் வழிப்பட்டதாக, பகுத்தறிவாக எதையும் கேள்வி கேட்டு ஆராயும் அறிவாக இருக்குமானால் உங்களை யாராலும் வெல்ல முடியாது. நீங்கள் இன்று பட்டம் பெறுவதை பார்த்து உங்கள் பெற்றோர்கள் எத்தகைய மகிழ்ச்சியையும், பூரிப்பையும் அடைகிறார்களோ, அதே அளவு மகிழ்ச்சியை நானும் அடைகிறேன். முதல்வராக மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தைச் சார்ந்த ஒருவனாக உங்களைப் பார்த்து பெருமைப்படுகிறேன்.

இன்று உங்கள் குடும்பத்துக்கும் பல்கலைக்கழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ள நீங்கள், எதிர்காலத்தில் நமது தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் இதேபோல பெருமைத்தேடித் தர வேண்டும், அதுதான் நான் உங்களுக்கு வைக்கக்கூடிய வேண்டுகோள். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் நிதி ஆதாரப் பெருக்கத்துக்கும் தமிழக அரசும் உயர்கல்வித் துறையும் என்றென்றும் துணை நிற்கும்" என்று முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x