Published : 06 Aug 2023 01:53 PM
Last Updated : 06 Aug 2023 01:53 PM

ரத்தத்தில் நச்சுகள் கலந்ததால் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு: அரசு மருத்துவமனை விளக்கம்

மருத்துவமனை விளக்கம் (இடது), உயிரிழந்த குழந்தையின் தாய் (வலது)

சென்னை: பாக்டீரியா தொற்றால் ரத்தத்தில் நச்சுகள் கலந்ததால் ஏற்பட்ட பாதிப்பால், கை அகற்றப்பட்ட நிலையில் எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்ததாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை முகமது மகிர், குறை பிரசவத்தில் 1.5 கிலோ எடையுடன் 32 வாரத்தில் பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு தீவிர Hydrocephalus என்ற மூளையில் நீர்கசிவு கோளாறு இருந்தது.

இந்த நீர் கசிவை உறிஞ்சி எடுப்பதற்காக, 5 மாத காலமாக VP Shunt என்ற சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும், விட்டமின் டி குறைபாடு, ஹைப்போதைராய்டிசம் உள்ளிட்ட குறைபாடுகளும் காணப்பட்டன. தீவிர ஊட்டச்சத்து குறைபாடு, வளர்திறன் குறைபாடு கொண்ட அந்த குழந்தைக்கு, நீர் கசிவை உறிஞ்சுவதற்காக பொருத்தப்பட்டிருந்த VP Shunt ஆசனவாய் வழியாக வெளியேறிய காரணத்தால், குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றினால், குழந்தையின் ரத்தத்தில் நச்சுக்கள் கலந்ததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் மருத்துவர்கள் வழங்கிய சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்துள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தஸ்தகீர். இவரது ஒன்றரை வயது மகன் முகமது மகிருக்கு, தலையில் நீர் வழிந்ததால் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த குழந்தையின் வலது கை அழுகியதால், அந்த கை அகற்றப்பட்டது. தவறான சிகிச்சையால்தான் குழந்தையின் கை பாதிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக விசாரணை நடத்த 3 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். விரிவாக வாசிக்க > சென்னை அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 2 Comments )
  • d
    durga

    மிகுந்த துயரம் தரும் செய்தி .

  • N
    Naranana Swamy

    வியாதி காரணமாக நோயாளி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பின்னரும் மரணம் அடைந்தால் உயிரிழப்பை நிதி ஆதாயம் பெரும் வாய்ப்பாக மாற்றும் சிந்தனை வளர்ந்து விட்டது.பெற்றவர்கள் அசிரத்தை காரணமாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறில் ஒருவயது குழந்தை நான்கு நாள் முயற்சிக்கு பின்னும் காப்பாற்றமுடியாமல் இறந்ததற்கு பெற்றவர்களுக்கு அரசு நிதி உதவி அரசு வேலை தரப்பட்டது தவறான முன்னுதாரணம் தந்துவிட்டது.விஷச்சாராயம் குடித்து செத்தவர்கள் குடும்பங்களுக்கு பத்து லட்சம் தரப்பட்டது சிறிதும் நியாய முகாந்திரம் இல்லை.

 
x
News Hub
Icon