Published : 06 Aug 2023 12:56 PM
Last Updated : 06 Aug 2023 12:56 PM

பாலின சமத்துவத்தின் அடையாளமாக சென்னை பல்கலை. விளங்குகிறது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

சென்னை: "சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில், ஒரு லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பாலின சமத்துவத்தின் அடையாளமாக சென்னைப் பல்கலைக்கழகம் திகழ்கிறது. சென்னைப் பல்கலைக்கழகம் கல்வியை மேம்படுத்துவதில், இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறது" என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர், அவர் பேசியது: "சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. பதக்கங்கள் மற்றும் பட்டங்களை பெற்றவர்களுக்கும், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழின் சங்க இலக்கியங்கள் இந்தியாவுக்கு மிகப்பெரிய பொக்கிஷம். திருக்குறள் அறிவுக்களஞ்சியமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள கோயில்களும், சிற்பங்களும் தமிழகத்தின் கலை சிறப்பினை விவரிக்கின்றன. கலை, இலக்கியம் என கலாசாரம் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில், ஒரு லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பாலின சமத்துவத்தின் அடையாளமாக சென்னைப் பல்கலைக்கழகம் திகழ்கிறது. சென்னைப் பல்கலைக்கழகம் கல்வியை மேம்படுத்துவதில், இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறது.

1867ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம், இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்கள் 6 பேர் இந்த பாரம்பரியம் மிக்க பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். இன்று நீங்கள் நடந்து செல்லும் அதே பாதையில் அவர்களும் சென்றுள்ளனர் என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, கே.ஆர்.நாராயணன், ஆர்.வெங்கட்ராமன் மற்றும் ஏபிஜே அப்துல்கலாம் ஆகியோர் இங்கிருந்து படித்து வந்தவர்கள்தான். இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியும் இந்த பல்கலைக்கழகத்தில் படித்தவர்தான். இத்தகைய தலைவர்களை எல்லாம் உருவாக்கிய இந்த பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றுள்ள நீங்கள் அதற்காக பெருமிதம் கொள்ள வேண்டும்" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x