Published : 06 Aug 2023 05:35 AM
Last Updated : 06 Aug 2023 05:35 AM

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பதிவு கட்டணம் 2 மடங்கு உயர்வு

சென்னை: அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம், தணிக்கை) சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனுப்பியுள்ள கடிதம்: தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு (அப்பார்ட்மெண்ட்) உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து கட்டிட நிறைவு சான்றுபெறப்படுகிறது. கட்டுமான நிறுவனங்களால் அடிநிலம் (யுடிஎஸ்) மற்றும் கட்டிடமும் சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், கிரய ஆவணத்தில் அடிநிலம் மட்டுமே காட்டப்படுகிறது. இனிமேல், கட்டிடநிறைவு சான்று பெறப்பட்ட அப்பார்ட்மெண்ட் வீடுகளை அடிநிலத்துடன் கட்டிடமும் சேர்ந்து விற்பனைஆவணமாக பதிவு செய்ய வேண்டும். கட்டிடம் நிறைவு சான்று வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் விவரத்தை சம்பந்தப்பட்ட துணை பதிவுத்துறை தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளை அணுகி பெற்று தங்களின் எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இந்த புதிய பத்திரப்பதிவு கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. இதுவரை புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக ஒருவர் வீடு வாங்குகிறார் என்றால் யுடிஎஸ் பதிவு கட்டணம் 9 சதவீதம் மற்றும் கட்டுமான பதிவு கட்டணம் 4 சதவீதம்செலுத்தும் நிலை இருந்தது. எடுத்துக்காட்டாக ரூ.50 லட்சத்துக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும் நபர் பதிவு கட்டணமாக ரூ.2.16 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும். தற்போது கட்டுமானம்முடிந்து, கட்டிட நிறைவு சான்றுசான்றிதழ் பெற்ற அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு மொத்தவிலையில் 9 சதவீத பதிவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.50 லட்சத்தில் ஒருவர் வீடு வாங்கினால், ஒரே பதிவுகட்டணமாக ரூ.4.50 லட்சம் செலுத்தம் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குபவர்களுக்கு பதிவு கட்டணம் 2 மடங்கு அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக கிரெடாய் (சென்னை) தலைவர் எஸ்.சிவகுருநாதன் கூறியதாவது: அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குபவர்களுக்கு பத்திரப்பதிவு கட்டணம் 100 சதவீதம் அதிகரித்து இரண்டு மடங்காகியுள்ளது. இதனால், சொந்தமாக வீடு வாங்க நினைப்பவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் அவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பத்திரப்பதிவு குறையும். அரசுக்கு பதிவுத்துறை வருவாய் இழப்பு ஏற்படும். வீடுகள் விற்பனையாவது குறைவதால், கட்டுமான நிறுவனங்கள் பாதிக்கப்படும்.ஒரு புதிய நடைமுறையை அமல்படுத்தும்போது, காலஅவகாசம் கொடுக்க வேண்டும்.

ஆனால், இந்தமுறையை உடனே கொண்டு வந்துவிட்டனர். இது மிகவும் தவறானது.சொந்தமாக வீடு வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், வீட்டை பார்த்து முன் பணம் கொடுத்திருப்பவர்களால் எப்படி உடனே ரூ.2, ரூ.3 லட்சத்தைதிரட்ட முடியும். தமிழகத்தில் வழிகாட்டி மதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது புதிதாகஉயர்த்தப்பட்ட பத்திரப்பதிவு கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவை எல்லாம் கடந்தமூன்று மாதத்தில் செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கு பின்னர், தற்போதுதான் இந்த துறை மீண்டும் வருகிறது. இந்த நேரத்தில் இப்படி கட்டணத்தை உயர்த்துவது என்ன நியாயம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x