Published : 05 Nov 2017 12:19 PM
Last Updated : 05 Nov 2017 12:19 PM
35 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டங்களை அமல்படுத்தி, விவசாயிகளின் பயன்பாட்டுக்கு எப்போது கொண்டுவரப் போகிறார்கள் என தவிக்கிறார்கள் திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகள்.
பரம்பிக்குளம் -ஆழியாறு (பிஏபி) திட்டம் தமிழகத்தில் காமராஜர், கேரளாவில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ஆகியோர் முதல்வர்களாக இருந்தபோது உருவாக்கப்பட்ட திட்டம். பிஏபி திட்டத்தில் அணை கட்டுவது, வாய்க்கால் வெட்டுவது என அனைத்து செலவையும் தமிழக அரசு செய்தது. இதில் மேல் நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, திருமூர்த்தி, உப்பாறு ஆகிய ஒன்பது அணைகள் கட்டப்பட்டன. இத்திட்டத்தில் ஆனைமலையாறு அணை, நல்லாறு அணை ஆகிய இரண்டு அணைகள் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கட்டப்படவில்லை.
இட்டலி ஆற்றின் குறுக்கே ஆனைமலையாறு அணையை கட்டியிருந்தால், இரண்டரை டிஎம்சி கூடுதல் தண்ணீர் கிடைத்திருக்கும். அதேபோல் மேல் நீராற்றில் இருந்து சுரங்கப்பாதை மூலம் நல்லாற்றுக்கு கொண்டுவந்து நல்லாற்றில் அணை கட்டினால், ஏழரை டிஎம்சி தண்ணீர் உடனடியாக வந்துசேரும். அதேபோல் வழித்தடத்தில் இரண்டு நீர்மின் திட்டங்களை உருவாக்கும் திட்டமும் ஏற்கெனவே போடப்பட்ட திட்டத்தில் இருக்கிறது. இதனால் மின்சாரமும் செலவின்றி கிடைக்க வாய்ப்புகள் உண்டு. இப்படி பல்வேறு பாசன நலன்களை கொண்டதுதான் இரு அணைத் திட்டங்களும்.
உடுக்கம்பாளையம் பாசன சபைத் தலைவர் சு.பரமசிவம் கூறியதாவது: பிஏபி திட்டம் மூலம் 100 கி.மீ. பயணம் செய்து, இன்றைக்கு திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வந்து சேர்கிறது. நீர்வழித்தடத்தில் நீரின் விரயம் ஏராளம். இதனால் திருமூர்த்தி அணைக்கு நீர் வருவது காலதாமதம் ஆகிறது. காண்டூர் கால்வாயில் 1,150 கன அடிதான் தண்ணீர் கொண்டுவர முடியும். அதிக தண்ணீர் வரும்போது, மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் வீணாக கலக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு, நல்லாறு அணை கட்டுவதே. பிஏபி ஒப்பந்தத்தில் கேரள அரசு இடமலையாறு அணையை கட்டிவிட்டால் ஆனைமலையாறு, நல்லாற்றை கட்டிக் கொள்ளலாம் என சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இடமலையாறு கட்டி முடிக்கப்பட்டு 30 ஆண்டு களுக்கும் மேலாகிறது.
1997-ம் ஆண்டு திமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகனை சந்தித்து இரண்டு திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தினோம். அதிமுக, திமுக அரசுகள் மாறி, மாறி ஆட்சி செய்தாலும், இதுவரை திட்டங்கள் வெறும் தேர்தல் நேர வாக்குறுதியாகவே இருந்து வருகின்றன. திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்று சொன்னால், விவசாயிகளின் எதிர்காலம் நிச்சயம் கேள்விக்குறியாகும். அதுமட்டுமின்றி, இரு மாவட்டங்களைச் சேர்ந்த 134 ஊராட்சிகள், 5 பேரூராட்சிகள், உடுமலை நகராட்சி என மிகப்பெரிய கூட்டுக் குடிநீர் திட்டமும் இதில் அடங்கியுள்ளது. தற்போது அத்திக்கடவு- அவிநாசி திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி திட்டத்தை செயல்பட வைத்ததுபோல், இந்த திட்டம் குறித்து கிராமம், கிராமமாக விழிப்புணர்வு பணிகளை தொடங்கியுள்ளோம் என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் கூறியதாவது: சமீபத்தில் கேரள முதல்வர் தமிழக முதல்வரை சந்தித்தார். இந்த உறவு இருக்கும்போதுகூட, தமிழக நீர்பாசனத் திட்டங்கள் பற்றி எதுவும் பேசியதாக தெரியவில்லை. பிஏபி திட்டம், நல்லாறு, ஆனைமலையாறு திட்டங்கள் தமிழகத்துக்கானது என்ற முறையில், எந்த பேச்சுவார்த்தையும் நடந்ததாக தெரியவில்லை. தற்போது இரு மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், 4 1/4 லட்சம் ஏக்கர் நேரடியாகவும், 2 லட்சம் ஏக்கர் மறைமுகமாகவும் பயனளிக்கும் நல்லாறு - ஆனைமலையாறு அணை திட்டங்களை நிறைவேற்றித் தருவதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். 32 டிஎம்சி தண்ணீரை எதிர்பார்த்து, இதுவரையிலும் கடந்த பல ஆண்டுகளாக போதிய மழை இன்மையாலும், தண்ணீரை சேதாரம் இன்றி கொண்டுவர முடியாததாலும், சிலநேரங்களில் மேல்நீராறு, சோலையாறு பகுதிகளில் அதிக மழைபெய்து, கடலுக்கு வீணாகச் செல்லும் நிலையில்கூட திருமூர்த்தி அணைக்கு நீர் வருவதில்லை. ஆகவே, நல்லாறு அணையை கட்ட வேண்டியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பகுதி பாசனம்பெறுகிற நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். விவசாயிகள் சிந்திக்க தொடங்கியுள்ளனர். அனைவரையும் ஒருங்கிணைத்து நல்லாறு அணைத் திட்டம் நிறைவேற வற்புறுத்துவோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT