Published : 06 Aug 2023 06:49 AM
Last Updated : 06 Aug 2023 06:49 AM
சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி என்.வி.என்.சோமு, ‘‘கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள், அங்கு நடந்த பேச்சுவார்த்தை, அதனால் ஏற்பட்ட விளைவுகள்’’ பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு, மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன் அளித்த பதில் வருமாறு: வெளிநாடுகளுடன் இணக்கமான உறவை வளர்ப்பதற்கும், இருதரப்பு உறவுகள், மண்டலவாரியான உறவுகள் மற்றும் உலகளாவிய உறவுகளைப் பேணுவதில் இந்தியாவின் பங்களிப்பை உறுதிசெய்வதற்கு, உயர்மட்ட அளவிலான வெளிநாட்டுப் பயணங்களும் அதில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளும் உதவுகின்றன.
இந்தப் பயணங்களில் நமது குரலை மட்டும் ஒலிக்காமல், உலகளாவிய அளவில் அனைத்து மக்களுக்குமான அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பற்றியும் இந்தியா வலியுறுத்துகிறது. அத்துடன் சர்வதேச குற்றங்கள், தீவிரவாதம், இணையதளப் பாதுகாப்பு, மின்சாரம், உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்சினைகளில் நமது பார்வையை பிற நாடுகள் ஏற்கச் செய்யும் வகையில் இந்தப் பயணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்களின்போது போடப்படும்ஒப்பந்தங்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் அந்தந்த நாடுகளுடனான உறவை பலப்படுத்துவதுடன், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் பரஸ்பரபலனைத் தரவும் பயன்படுகின்றன.
இந்த இலக்குகளை மையமாக வைத்து கடந்த 3 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பிரதமர்நரேந்திர மோடி பயணமாகியிருக்கிறார். இதில் அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபு நாடுகளுக்கு 2 முறை பயணம் செய்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 3 ஆண்டுகளில் 70 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதேபோல இத்தகைய உறவுகளைப் பேணும் வகையில் வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியா வருவதும் தொடர் நடவடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில், கடந்தஓராண்டில் மாலத் தீவுகள் அதிபர்முதல் ஜப்பான் பிரதமர் வரை 13 நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்து, பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...