Published : 06 Aug 2023 07:05 AM
Last Updated : 06 Aug 2023 07:05 AM
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் வாக்கு வாங்கியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளைத் தமிழக தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவுறுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநில வாரியாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ராகுல்காந்தி முன்னிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மாநிலத் தலைவர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏ.க்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் என 73 பேர் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம்என தமிழகத்தில் பேசப்பட்டு வருகிறது. அதுதொடர்பாக விவாதிக்கும் கூட்டம் இது இல்லை. மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது, தமிழகத்தில் காங்கிரஸ் வாக்கு வங்கியை அதிகரிக்கச் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மட்டுமே பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார். அனைவரும் பேசவும் வாய்ப்பு வழங்கியுள்ளார்.
இந்நிலையில், தமிழகத் தலைவரை மாற்ற வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்ய, மூத்த தலைவர்கள் சிலர், தமிழகத்தில் காங்கிரஸ் பலவீனமாக இருப்பதாகத்தெரிவித்துள்ளனர். அப்போது குறுக்கிட்ட ராகுல்காந்தி, தலைவரால் கட்சி பலவீனமடைகிறது என்றால், உங்கள் மாவட்டங்களில் கட்சி எப்படி இருக்கிறது, பலமாக வைத்திருக்க நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இறுதியாக மல்லிகார்ஜுன கார்கே, தமிழகத்தில் வாக்கு வங்கியை அதிகரிக்க அனைவரும் பாடுபட வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தின் முடிவில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவிலேயே சிறந்த கூட்டணி தமிழகத்தில் இருக்கிறது. எனவே அந்தக் கூட்டணியை மேலும்பலப்படுத்தி, வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 இடங்களிலும் வெற்றிபெற வேண்டும் என்று கார்கே அறிவுரை வழங்கி இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதும், ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும் என்று அவர் கூறுவதாலும், தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராகப் பாஜகவினர் பல்வேறு இடையூறுகளைச் செய்கிறார்கள். பாஜகவின் முயற்சிகள்வெற்றிபெறக் கூடாது என்பது குறித்தும் விவாதித்து இருக்கிறோம்.
காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலை எவ்வாறு சந்திக்க வேண்டும்.தேர்தல் பரப்புரையை எவ்வாறுசெய்ய வேண்டும். காங்கிரஸின் சாதனைகளை எவ்வாறு மக்களிடம்தெரிவிக்க வேண்டும் என்பது குறித்தும் தெளிவான கருத்துரைகள் வழங்கப்பட்டன. 3 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் எல்லா பிரச்சினைகள் குறித்தும் விவாதித் திருக்கிறோம்.
நான் பேசும்போது, வட்டாரத் தலைவர்கள், நகரத் தலைவர்கள் மாநாடுகளை 6 பகுதிகளாகப் பிரித்து நடத்த வேண்டும். எல்லாமாவட்டங்களிலும் மாவட்ட மாநாடுகள் நடத்தப்பட வேண்டும். இறுதியாக மாநில மாநாடு நடத்தப்பட வேண்டும். இந்நிகழ்ச்சிகளில் ராகுல்காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் பங்கேற்க வேண்டும்.
இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும்போது, கட்சி மேலும் வலுவடையும். தேர்தலுக்குள் அனைத்துக் கிராமங்களிலும் காங்கிரஸ் கொடி பறப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT