Published : 25 Nov 2017 09:10 AM
Last Updated : 25 Nov 2017 09:10 AM

மருத்துவ சேவையில் இன்று 60-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மயிலாடுதுறையின் மனிதநேய மருத்துவர்

மயிலாடுதுறையில் மருத்துவ சேவையில் 60-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தபோதிலும் இன்றும் இளைஞரைப் போன்று மிகவும் சுறுசுறுப்புடன் மருத்துவம் பார்த்து வருகிறார் 84 வயதான மருத்துவர் வீ.ராமமூர்த்தி.

மருத்துவமனைகள், மருத்துவர்கள் என்றாலே அதிக பணம் கேட்பார்கள் என மக்கள் மனதில் தோன்றும் எண்ணத்துக்கு முற்றிலும் மாறாக, இன்றைய சூழலில் பணத்தை ஒரு பொருட்டாக எண்ணாமல் கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு இன்றும் மருத்துவ சேவையை செய்து வருகிறார் இவர்.

இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமம். பாரம்பரியமான விவசாயக் குடும்பம். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயின்றுவிட்டு, நாகை மாவட்டம் மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் கிளினிக் வைத்து கடந்த 59 ஆண்டுகளாக மருத்துவம் செய்து வருகிறார். கிளினிக்கின் பின்புறம் வீடு. இவர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கவுரவ மருத்துவராக ஏறத்தாழ 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

தொடர்ந்து, 59 ஆண்டுகளாகத் தன்னை நாடிவரும் மக்களின் நோய் தீர்க்கும் மருத்துவப் பணியை மிகுந்த கண்ணியத்தோடும், மனிதநேயத்தோடும் செய்து வருகிறார் டாக்டர் ராமமூர்த்தி.

மருத்துவத் தொழிலுக்கு வந்தபோது எப்படி இருந்தாரோ அதே துடிப்புடனும், அக்கறையுடனும் சிகிச்சைக்கு வருபவர்களை அணுகி மருத்துவம் செய்து வருகிறார். சிகிச்சை பெற வரும் நோயாளிகள் அவரவர் எவ்வளவு தர முடியுமோ அதை (ரூ.5 அல்லது ரூ.10) அவரது மேஜை மீது வைப்பார்கள். சிலருக்கு சிகிச்சை அளித்துவிட்டு, பணம் வேண்டாம் சென்று வா என அனுப்பி வைப்பார். யாரேனும் ‘ஐயா, காசு இல்லை அப்புறம் தருகிறேன்’ என்றால், தோளைத் தட்டிக்கொடுத்து ‘தரவேண்டாம் போய்விட்டு வா’ என அனுப்பி வைப்பார். இவர் எழுதிக் கொடுக்கும் மருந்துகளும் ரூ.20 அல்லது 30-க்குள்தான் இருக்கும்.

மருத்துவத் தொழிலில் 59 ஆண்டுகளைக் கடந்து இன்று (நவ.25) 60-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் டாக்டர் ராமமூர்த்தி, ‘தி இந்து’விடம் கூறியது: நான் சிறுவயதாக இருக்கும்போது கிராமத்தில் பலரும் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிக்குள்ளாவதைப் பார்த்திருக்கிறேன். அப்போதுதான் மருத்துவராகி இல்லாத மக்களுக்கு சேவையை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது. 25.11.1958-ல் மருத்துவத் தொழிலைத் தொடங்கினேன். இந்த தொழிலில் 60-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த காலத்தில் நோய்கள் பெருகிவிட்டன. பணம் இல்லாததால் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் ஏழை மக்கள் இன்றும் உள்ளனர்.

காஞ்சி மகா பெரியவரை 48 ஆண்டுகளுக்கு முன்பு நான் சந்தித்தபோது, “ஏழைகளிடம் காசு வாங்காதே, ஒத்தாசையாக இரு” எனக் கூறினார். அதை இன்றும் கடைப்பிடித்து வருகிறேன்.

மனைவியே பெரும் பாக்கியம்

எனது மனிதாபிமான சேவைக்கு, மனைவி நீலாவும் ஒரு காரணம். அவர் என்றைக்குமே பணம் சேர்க்க வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும் என என்னிடம் கூறியதில்லை. அவர் எனக்கு மனைவியாக வாய்த்தது பெரும் பாக்கியம். என் ஒரே மகன் சீனிவாசன் மருத்துவம் படித்துவிட்டு சென்னையில் பணியாற்றி வருகிறார். ஏழை மக்களுக்கு அவரும் உதவி வருகிறார். சொத்துகளை சேர்க்காவிட்டாலும், ஆயிரக்கணக்கான மக்களின் நல்ல மனங்களுக்கு நெருக்கமான நபராக இருக்கிறேன் என்பதுதான் எனக்குப் பெருமை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x