Last Updated : 20 Nov, 2017 11:57 AM

 

Published : 20 Nov 2017 11:57 AM
Last Updated : 20 Nov 2017 11:57 AM

புதுச்சேரியில் பைக்கில் சென்றவர் வெட்டிப் படுகொலை: காரில் தப்பிய கொலையாளிகளை விரட்டிப் பிடித்த போலீஸ்

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் இன்று காலை (திங்கள்கிழமை) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காரில் தப்பிய கொலையாளிகளை விரட்டிச் சென்ற போலீஸார் கடலூரில் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இருவர் தப்பியதாகவும், மூவர் பிடிப்பட்டதாகவும் போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன்(40). இவர் புதுச்சேரியில் காமராஜர் வீதியில் தங்கியிருந்து நெய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று காலை சிற்றுண்டி வாங்கிகொண்டு புதுச்சேரியிலுள்ள பிரபல ஜவுளிக்கடை பின்புறமுள்ள புதுநகர் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று கொளஞ்சியப்பன் வாகனத்தின் மீது மோதியது. அவர் தவறி கீழே விழுந்தவுடன் காரில் வந்த கும்பல், சராமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இதைப் பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த ஒதியஞ்சாலை போலீஸார் கொளஞ்சியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகள் காரில் கடலூர் பகுதியில் செல்வதை அறிந்து போலீஸார் தகவல் அளித்தனர். இதையடுத்து போலீஸார் குற்றவாளிகளின் காரை துரத்தியபோது புதுச்சேரி - கடலூர் சாலையில் வழிநெடுகிலும் பல இடங்களில் குற்றவாளிகளின் கார் பல விபத்துகளை ஏற்படுத்தியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் இப்பகுதியில் பதற்றம் கூடியது.

 

இந்நிலையில் புதுச்சேரியில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை கடலூர் புதுநகர் அருகே  போலீஸார் கைது செய்துள்ளனர்.  இச்சம்பவத்தில் காரில் சென்ற 3 பேர் பிடிப்பட்டதாகவும், மீதமுள்ள 2 பேர் தப்பி விட்டதாகவும் தெரிகிறது. பிடிப்பட்டோரும் சிவகங்கையைச் சேர்ந்தோர் என்று தெரிந்துள்ளது. கொலைக்கான காரணம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

கொலை செய்யப்பட்ட கொளஞ்சியப்பன் மீது தமிழகத்தில் 3 கொலை வழக்குகள் உள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x