Published : 29 Nov 2017 09:45 AM
Last Updated : 29 Nov 2017 09:45 AM

கருணாநிதி திறந்த மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பஸ்களிலும் அறிவிப்பின்றி மாற்றியதால் வெளியூர் பயணிகள் குழப்பம்

18 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்துவைத்த மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையத்துக்கு தற்போது எம்ஜிஆர் பெயரை சூட்டியதோடு நிற்காமல், பஸ்களிலும் முன் அறிவிப்பு இன்றி பெயரை மாற்றி போர்டை மாட்டியதால் மதுரைக்கு வரும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளியூர் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.

சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தை அடுத்து தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய பஸ்நிலையம் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம். இந்த பஸ் நிலையத்துக்கு ஒரு நாளைக்கு இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். 3,000-க்கும் மேற்பட்ட வெளியூர் பஸ்கள், உள்ளூர் பஸ்கள், மினி பஸ்கள் 24 மணி நேரமும் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்தை, கடந்த 1999-ம் ஆண்டு மே 25-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். ஆனால், அவர் இந்த பஸ் நிலையத்துக்கு யார் பெயரையும் சூட்டவில்லை.

மதுரையில் ஏற்கெனவே ஒருங்கிணைந்த பஸ் நிலையம் இல்லாமல் மாட்டுத்தாவணி பஸ் நிலையம், பெரியார் பஸ் நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் என திசைக்கு ஒரு பஸ் நிலையம் செயல்படுவதால் வெளியூர் பயணிகள் தமிழகத்தின் வடக்கு, மத்திய, மேற்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கு மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

முதல்வர் அறிவிப்பு

இந்நிலையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டுமென்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் உள்ளூர் அதிமுகவினர் வலியுறுத்தி வந்தனர். எனினும், மாட்டுத்தாவணி பஸ்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை அவர் சூட்டவில்லை. சமீபத்தில் மதுரையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி மாட்டுத்தாவணி பஸ்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என அறிவித்து அரசு ஆணையை உடனடியாக வெளியிட்டார்.

அவசரமாக பெயர் மாற்றம்

அடுத்த ஒரு சில வாரத்தில், மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தின் பெயர் பலகை அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக எம்ஜிஆர் பஸ்நிலையம் பெயர் பலகை வைத்தனர். போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உள்ளூர் பஸ்களில் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் என்பதற்கு பதிலாக எம்ஜிஆர் பஸ்நிலையம் என்று முன் அறிவிப்பே இல்லாமல் மாற்றினர். அதனால், வெளியூர்களில் இருந்து வந்த பயணிகள், உள்ளூர் பயணிகள் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு செல்வதில் குழப்பம் அடைந்தனர். மாட்டுத்தாவணி பஸ்நிலையம் செல்லும் பஸ்கள் வந்தாலும், அதில் எம்ஜிஆர் பஸ்நிலையம் என போர்டு மாட்டி இருந்ததால் மாட்டுதாவணி பஸ்நிலையத்துக்காக காத்திருந்த குழப்பமும் அரங்கேறியது. மதுரைக்கு வரும் வெளியூர் பயணிகளும் பஸ் நிலையக் குளறுபடியால் மாட்டுத்தாவணிக்குச் செல்வதில் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

வெளியூர் பயணிகள் குழப்பம்

மதுரை தென்தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், கொடைக்கானல், பழனி, கன்னியாகுமரி, ராமேசுவரம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு செல்வதற்கான வழித்தடமாகவும் உள்ளது. அதனால், தினமும் வெளியூர்களில் இருந்து வருவோர் முன்னறிவிப்பு இல்லாத பஸ்நிலைய பெயர் மாற்ற நடைமுறையால் கடும் சிரமப்படுகிறார்கள்.

காலப்போக்கில் சரியாகும்

இதுகுறித்து வெளியூரில் இருந்து வந்த பயணி எஸ்.சாமுவேல் கூறும்போது, ‘பஸ் நிலையத்துக்கு வேண்டுமென்றால் எம்ஜிஆர் பெயரை வைத்து இருக்கலாம். ஆனால், பஸ்களில் மாட்டுத்தாவணிக்கு பதில் எம்ஜிஆர் பஸ்நிலையம் என போர்டு மாட்டியது தேவையில்லாதது. மாட்டுத்தாவணிக்கு அடிக்கடி வந்து செல்லும் நானே இன்று (நேற்று) எம்ஜிஆர் பஸ்நிலையம் போட்டிருந்த 2, 3 பஸ்களில் ஏறாமல் நின்றேன்.

ரொம்ப நேரம் காத்திருந்தபிறகு அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோதுதான் இந்த பெயர் மாற்ற குழப்பம் தெரியவந்தது. புதிதாக பஸ்நிலையம் கட்டினால் பெயர் மாற்றினால் தவறில்லை. ஆனால், அனைவருக்கும் நன்கு பரிட்சயமான பஸ் நிலையத்தின் பெயரை இப்போது மாற்ற வேண்டிய அவசியம் என்ன? என்றார்.

போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘மாட்டுத்தாவணி என்றிருந்த உள்ளூர் பஸ்களில் மட்டுமே பெயர் மாற்றப்பட்டுள்ளது. வெளியூர் பஸ்களில் மதுரை என்ற பெயரே இருக்கிறது, எல்லாம் போக போக சரியாகிவிடும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x