Published : 09 Jul 2014 12:17 PM
Last Updated : 09 Jul 2014 12:17 PM
சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விநியோகத்தில் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பதிவு செய்து 15 நாட்கள் ஆகியும் சிலிண்டர்கள் கிடைக்காததால் மக்கள் அவதிப்படு கின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சடகோபன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பட்டாபிராம், ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களின் காஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காஸ் இணைப்பு வைத்துள்ளனர். முன்பெல்லாம் பதிவு செய்தால் 3 நாள் முதல் ஒரு வாரத்துக்குள் சிலிண்டர்கள் கிடைத்துவிடும். சில மாதங்களாக பதிவு செய்த அன்றோ அல்லது மறுநாளோகூட கிடைக்கும் அளவுக்கு சிலிண்டர் விநியோகம் விரைவாக இருந்தது. ஆனால், கடந்த ஒரு மாதமாக சிலிண்டர் விநியோகம் தடைபட்டுள்ளது. பதிவு செய்து 15 நாட்கள் ஆகியும் சிலிண்டர்கள் கிடைப்பதில்லை.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட காஸ் ஏஜென்ஸியிடம் சென்று கேட்டால் அவர்களும் உரிய பதில் அளிப்பதில்லை.
மத்திய அரசின் பொது பட்ஜெட், 10-ம் தேதி (நாளை) தாக்கல் செய்யப்படுகிறது. அதில் காஸ் மானியம் குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்படுவதால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதோ என சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்வாறு சடகோபன் கூறினார்.
ஆவடியைச் சேர்ந்த வாசுகி கூறுகையில், ‘‘எங்கள் வீட்டில் ஒரு சிலிண்டர் மட்டுமே உள்ளது. தற்போது சிலிண்டர் தீர்ந்து பத்து நாள் ஆகியும் புது சிலிண்டர் கிடைக்கவில்லை. இதனால், மண்ணெண்ணெய் ஸ்டவ்தான் பயன்படுத்தி வருகிறேன். இப்போதே சிலிண்டருக்கு தட்டுப்பாடு என்றால், மழைக் காலத்தை நினைத்தாலேயே பயமாக உள்ளது’’ என்றார்.
இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவன விநியோகஸ்தர் ஒருவர் கூறுகையில், பெரும்பாலான சிலிண்டர்கள் காலாவதியாகி விட்டன. அவற்றை பரிசோதித்து மீண்டும் அவை பயன்படுத்துவதற்கு ஏற்றதா என்பது குறித்து கண்டறியப்பட்டு வருகிறது.
இதன்காரணமாக, சிலிண்டர் விநியோகத் தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் நிலைமை சீரடையும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT