Published : 05 Aug 2023 05:11 PM
Last Updated : 05 Aug 2023 05:11 PM
கும்பகோணம்: காங்கிரஸ் மேயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கும்பகோணம் மாநகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி நடைபெறுவதையொட்டி, அந்த விழாவுக்கு கும்பகோணம் பகுதியிலிருந்து புனித நீர் அடங்கிய குடங்கள், கடந்த மாதம் 26-ம் தேதி அனைத்து இந்து கூட்டமைப்பு சார்பில் புறப்பட்டு சென்றது. இதில் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிலையில், சிறப்பு விருந்தினராக சூரியனார் கோயில் வாமதேவ சந்தானம் சிவாக்கிர யோகிகள் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் மாநகராட்சி மேயர் க.சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மேயர் க.சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கும்பகோணம் மாநகர காங்கிரஸ் சார்பில், கும்பகோணம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில், காங்கிரஸ் தலைமையே நடவடிக்கை எடு என தலைப்பிட்டு, எம்மதமும், சம்மதம் என்ற காங்கிரஸ் கொள்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மதவெறி ஆர்.எஸ்.எஸ்.கும்பலுடன் கைகோத்து அயோத்தி ராமர் கோயிலுக்கு தீர்த்தக்குடம் சுமக்கும் விசுவாசமற்ற கும்பகோணம் மேயர் மீது காங்கிரஸ் தலைமையே நடவடிக்கை எடு என அச்சிட்டவர்களின் பெயர்களுடன் ஒட்டப்பட்டுள்ளன.
இதனால், கும்பகோணம் காங்கிரஸ் கட்சியினரிடையே கோஷ்டி பூசல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த போஸ்ட்ரால் கும்பகோணம் மாநகரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேயர் க.சரவணன் கூறும்போது, “மேயர் என்பவர் பொதுவானவர். ஆதினம் என்னை அழைத்ததால் நான் சென்றேன். நான் ஒன்றும் ராமர் கோயில் கட்டுவதற்கு எதிரானவர் கிடையாது. என்ன பிடிக்காத எதிர் கோஷ்டியினர் தான் இந்தச் செயலை செய்திருப்பார்கள். இது தொடர்பாகக் கட்சியின் மேலிடத்தில் புகாரளிக்கவுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ச.அய்யப்பன் கூறியது, “இந்த நிகழ்ச்சியில் மேயர் பங்கேற்ற தவறானதாகும். காங்கிரஸ் கட்சிக்கும், கொள்கைக்கும் எதிரானதாகும். இந்தச் செயல், இவர் பாஜகவுக்குச் செல்வதற்கான நோக்கமாகக் கூட இருக்கலாம். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கொள்கையை பற்றித் தெரிந்திருந்தால் சென்றிருக்க மாட்டார். காங்கிரஸ், திமுக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இவர், அவர்களுடைய நிகழ்ச்சியில் பங்கேற்றது, கட்சிக்கு புறம்பான செயலாகும். கட்சி மேலிடத்தில் புகாரளிக்கவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT