Published : 05 Aug 2023 04:06 PM
Last Updated : 05 Aug 2023 04:06 PM

செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையோரின் 9 இடங்களில் 60 சொத்து ஆவணங்கள் பறிமுதல் - ED நடவடிக்கை

அமலாக்கத் துறை சோதனை

சென்னை: கரூர், கோவை, நாமக்கல் ஆகிய இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையோரின் 9 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 60 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பைபாஸ் இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தற்போது அவர் நீதிமன்றக் காவலில் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கரூர் ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரத்தில் உள்ள அவரது நிதி நிறுவனம், கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள கிரானைட் நிறுவன உரிமையாளர் பிரகாஷ் வீடு, அவரது கிரானைட் நிறுவனம், செங்குந்தபுரத்தில் மற்றொரு நிறுவனம் என 5 இடங்களில் துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதேபோல, கோவை ராமநாதபுரம் மணியம் சுப்பிரமணியர் வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வையாளர் முத்துபாலன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. திருச்சி சாலையில் உள்ள அருண் அசோசியேட் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் அருண் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவராக கருதப்படும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு திமுக ஒன்றியச் செயலாளர் வீரா.சாமிநாதனின் வீடு, அலுவலகம், பண்ணை இல்லத்திலும் ‘அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.

இந்தச் சோதனையில்களில் கணக்கில் வராத ரூ.22 லட்சம் பணம், ரூ.16.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், 60 சொத்துகளுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x