Published : 05 Aug 2023 04:47 PM
Last Updated : 05 Aug 2023 04:47 PM

ஆதரவற்ற நிலையில் அம்மா உணவகங்கள்! - பலரின் பசியாற்றிய திட்டம் புத்துயிர் பெறுமா?

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம்.

திருப்பூர்: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டங்களில் ஒன்று ‘அம்மா உணவகம்’. தமிழ்நாட்டை கடந்து பல்வேறு மாநில முதல்வர்களும், 10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த திட்டத்தைபார்த்து சென்று அமல்படுத்த ஆசைப்பட்டனர். அந்தளவுக்கு, இந்திய அளவில் பெரிதும் கவனம் ஈர்த்த தமிழ்நாட்டின் சமூகநீதி திட்டங்களில் ஒன்றாக அதிமுக அரசால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட திட்டம் இது.

உடல் உழைப்பு தொழிலாளர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பல்வேறு தரப்பினரின் ஆதரவால் அமோகமாக வரவேற்கப்பட்ட திட்டத்தின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக மாறி உள்ளது என்பதே யதார்த்தம். கடந்த2013-ம்ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம், 10 ஆண்டுகளுக்குள் சரிவை சந்தித்துள்ளது.

தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் மாநகரில், பலர் பசியாற்றிய இடமாக அம்மா உணவகமே இருந்தது. அம்மா உணவகங்கள் மீண்டும் புத்துணர்வு பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

திருப்பூரை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது: திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம், ‘ஸ்மார்ட் சிட்டி’ பேருந்து நிலையத்துக்காக விரிவுபடுத்தப்படும் பணிக்காக அகற்றப்பட்டது. நாள்தோறும் பொதுமக்கள் பசியாறிய உணவகம் அது. இன்றைக்கு அந்த சுவடே அங்கு இல்லை.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சில அம்மா உணவகங்களில் ஆளும் திமுக எம்.எல்.ஏ.க்கள் நேரில் ஆய்வு செய்து வியப்பளித்தனர். அதன் பின்னர் அம்மா உணவகத்தின் வளர்ச்சிக்கு எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை. திருப்பூர் ரயில் நிலையம், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தென்னம்பாளையம் தினசரி சந்தை மற்றும் சந்திராபுரம் என பல்வேறு இடங்களில் அம்மா உணவகங்கள் உள்ளன. அவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை, என்றனர்.

அம்மா உணவகத்தில் நடந்து வரும் சமையல் பணி.

அம்மா உணவக ஊழியர்கள் சிலர் கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.200 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தோம். இன்றைக்குதுப்புரவுத் தொழிலாளர்கள்கூட ஆட்சியர்நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கச் சொல்லி நிர்பந்தித்து வருகின்றனர். 10 ஆண்டு கால உழைப்புக்குப்பின், வெறும் ரூ.100 மட்டும் உயர்த்தி, மொத்தமாக ரூ. 300 வழங்குகின்றனர். இந்த காலத்தில் இந்த தொகையை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்க முடியும்.

காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், புதிய வரி மாற்றத்துக்கு பின் வீட்டு வாடகையும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. எங்களால் இந்த சொற்பக்கூலியை பெற்றுக்கொண்டு எப்படி சமாளிக்க முடியும்?. வேறு வழியின்றி சேவை மனப்பான்மையுடன் இந்த வேலையை செய்கிறோம். அம்மா உணவகங்களில் போதிய ஊழியர்கள் இல்லை.

உதாரணத்துக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களில் பலர் இங்கு சாப்பிடுகின்றனர். காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு என நாளொன்றுக்கு சுமார் 2ஆயிரம்பேர் சாப்பிடுகின்றனர். காலை 4.30 மணிக்கு வந்தால், மாலை 4 மணி ஆகிவிடும். முன்புபோல் போதிய அளவில் அரிசி, எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை மாநகராட்சிதரப்பு அனுப்புவதில்லை.

சாப்பிடுவோரின் எண்ணிக்கை ஏற்ப பொருட்கள் கேட்டால், அதிகாரிகள் சார்பில் மறுக்கப்படுகிறது. இருப்பதை கொண்டு சமைத்து, பொதுமக்களுக்கு வழங்குகிறோம். அம்மா உணவகங்கள் ஆதரவற்ற நிலைக்கே இன்றைக்கு சென்றுவிட்டன, என்றனர்.

திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் கூறிய தாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டத்தை, திமுக அரசு கிட்டத்தட்ட இருட்டடிப்பு செய்து பாழ்படுத்திவிட்டது. பெயரளவுக்கு தான் அம்மா உணவங்கள் செயல்படுகின்றன.பருப்பு உள்ளிட்ட பொருட்களின் அளவையும்குறைத்து விட்டதால், உணவின் தரம் குறைந்துவிட்டது.

கரோனா காலகட்டத்தில் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் மட்டுமின்றி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அன்னமிட்ட கையாக அம்மா உணவகங்கள் இருந்தன. கட்சி பாகுபடின்றி, அம்மா உணவகங்களை ஆக்கபூர்வமாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு, என்றார்.

மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்: திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மூடப்பட்ட அம்மா உணவகத்துக்கு பதில், வேறெங்கும் திறக்கப்படவில்லை. ஒவ்வொரு அம்மா உணவகத்திலும் விற்பனைக்கு ஏற்ப பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசின் விதிமுறைகளின் படி, பொருட்கள் வழங்கப்படுகின்றன.

எங்கும் குறைக்கப்படவில்லை. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில், அம்மா உணவகத்துக்கு அவர்கள் தான் நிதி அளிக்க வேண்டும். ஆனால் இதுநாள் வரை வழங்கவில்லை. பல உணவகங்களில் விற்பனை குறைந்துள்ளதால், அதற்கேற்ப பொருட்களை அனுப்புகிறோம்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x