Published : 05 Aug 2023 10:55 AM
Last Updated : 05 Aug 2023 10:55 AM

காவிரி நீர் விவகாரத்தில் இல்லாத ஊருக்கு வழி தேடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: இபிஎஸ் கண்டனம் 

எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்

சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லாத ஊருக்கு வழி தேடுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ என்று, நம் நானிலத்தின் பெருமையை உயர்த்திப் பாடினார் எம்ஜிஆர். ஆனால், ஆளும்போதெல்லாம் மக்களை எல்லா விதத்திலும் கையேந்த வைப்பதையே தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வரும் திமுக-வும், அதன் அரசும், நம் அண்டை மாநிலமான கர்நாடகத்திடம் காவிரி நீருக்காக கையேந்த வைக்கக்கூடிய அவல நிலையை ஏற்படுத்தியது வெட்கக் கேடானதாகும்.

காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கினை பெறுவதற்காக, எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், தொடர்ந்து எனது தலைமையிலான அரசும் மேற்கொண்ட தொடர் சட்ட நடவடிக்கைகளின் காரணமாக, 40 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று இறுதித் தீர்ப்பினை அளித்தது. அதன் அடிப்படையில், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவினை மத்திய அரசு 1.6.2018 அன்று அமைத்தது. இதன்படி மாதாந்திர அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா, தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும்.

பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி, காவிரியில் உள்ள நமது உரிமையை மீட்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31 ஆண்டுகால அரசு. காவிரி நதிநீர் தொடர்பாக கர்நாடகாவுக்கும், தமிழகத்துக்கும் இருந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் தமிழகத்தை வஞ்சித்தது திமுக அரசு. 1974-ல் காவிரி ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருந்தால், நமக்கு 500 டி.எம்.சி-க்கும் குறையாமல் தண்ணீர் வந்திருக்கும். திமுகவினர் நடத்திய மக்கள் விரோத ஆட்சியால், நாம் 1974 வரை பெற்று வந்த பங்கில் பாதிக்கு மேல் இழந்துள்ளோம்.

காவிரிப் பிரச்சனையில், சட்டப் போராட்டத்தில் நாம் வென்றது மட்டுமல்ல, ஆண்டுதோறும் நமக்கு உண்டான பங்கினை இதுநாள்வரையிலும் பெற்று வந்தோம். ஆனால், இந்த திமுக அரசினுடைய கூட்டாளிக் கட்சியான காங்கிரஸ், கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்தது முதல் மீண்டும் காவிரி நீர் விஷயத்தில் பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது.

கர்நாடகத்தில் உள்ள தங்கள் குடும்பத் தொழில்கள் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் காவிரி நீரில் தமிழகத்துக்கு உரிய பங்கை அந்த அரசோடு வாதாடி, போராடி வாங்காமல், மத்திய நீர்வளத் துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதுவதாக முதல்வர் நாடகமாடி வருவது கண்டிக்கத்தக்கது.

கடந்த வாரம் டெல்லிக்குச் சென்ற தமிழக நீர்வளத் துறை அமைச்சர், இந்த திமுக அரசின் முதல்வர் எழுதியதாகக் கூறி, மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சரிடம் ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். ‘தமிழகத்திற்குரிய நீரை காவிரியில் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் உத்தரவிடப்படும்’ என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக திமுக அரசின் நீர்வளத் துறை அமைச்சர் டெல்லியில் பேட்டி அளித்தார்.

இந்த நிலையில் இன்று, பிரதமருக்கு இதே பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலினும் ஒரு கடிதம் எழுதி இருப்பதாக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு, தண்ணீரை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டியது கர்நாடக அரசின் கடமை. அந்தக் கடமையில் இருந்து அரசியல் காரணங்களுக்காக நழுவும் அம்மாநில காங்கிரஸ் அரசை தட்டிக் கேட்க வேண்டியதும், கண்டிக்க வேண்டியதும், வற்புறுத்தி நம்முடைய பங்கு நீரைப் பெற வேண்டியதும் காங்கிரஸ் கூட்டாளியான திமுக ஆட்சியின் முதல்வர் ஸ்டாலினின் உரிமையும், பொறுப்புமாகும்.

ஜூன் 12-ல், வழக்கப்படி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டோம் என்று வீண் ஜம்பம் காட்டிய இந்த முதல்வர், அந்தத் தண்ணீர் டெல்டா குறுவை சாகுபடிக்கு போதுமானதா? கடைமடை வரை முழுமையாக, போதுமான அளவில் தண்ணீர் சென்று சேர்ந்ததா? குறுவை சாகுபடி முறையாக நடந்ததா? நிர்ணயிக்கப்பட்ட அளவு சாகுபடி செய்யப்பட்டதா? என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாமல், நானும் ஒரு டெல்டாகாரன் என்று வீண் ஜம்பம் அடித்துக்கொண்டே காலத்தை ஓட்டி, டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் வேலையை கனக் கச்சிதமாக இந்த முதல்வர் செய்து வருகிறார்.

எனது தலைமையிலான அரசின் சார்பில் மக்கள் நலனுக்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதும்போதெல்லாம் கேலியும், கிண்டலும் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், முதல்வர் ஆனபின் எடுத்ததெற்கெல்லாம் பிரதமருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும், ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி சாஸ்டாங்கமாக காலில் விழுந்து கிடக்கும் கொத்தடிமைகளின் தலைவராக விளங்குவதன் மர்மம் என்ன?

கர்நாடக மாநில நீர்பாசனத் துறையும், துணை முதல்வர் சிவக்குமார், மேகேதாட்டுவின் குறுக்கே அணை கட்டுவதற்காக நில அளவீடு செய்ய ஆட்களை நியமித்துள்ளதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்துள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த விடியா திமுக அரசு, கர்நாடக மாநில அரசு மேற்கொள்ளும் நில அளவைப் பணிகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் என்று எச்சரிக்கிறேன்.

தற்போது கர்நாடக அணைகளில் 80 சதவீதத்திற்கு மேலான அளவில் தண்ணீர் உள்ள நிலையில், தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்றும் வேலையை இத்தோடு நிறுத்திவிட்டு, உடனடியாக ஸ்டாலின் பெங்களூரு சென்று, உங்களது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உடனும், துணை முதலமைச்சர் சிவக்குமார் உடனும் பேசி, வற்புறுத்தி, உடனடியாக ஜூன் மாதம் 9.190 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.240 டி.எம்.சி, ஆகஸ்ட் மாதம் 45.950 டி.எம்.சி, ஆக மொத்தம் 86.380 டி.எம்.சி. தண்ணீரை விரைந்து பெற்று தர வேண்டும்.

தற்போது டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் சுமார் 3.5 லட்சம் ஏக்கரில் கருகிக் கொண்டிருக்கும் குறுவை நெல் பயிரைக் காப்பாற்ற வேண்டும். நமது விவசாயப் பெருங்குடி மக்களின் வயிற்றில் பால் வார்க்க வேண்டும் என்றும், ஓரங்க நாடகம் நடத்தும் இந்த திமுக அரசின் முதல்வர் வலியுறுத்துகிறேன்.

மறுக்கும்பட்சத்தில் திமுக அரசைக் கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டெல்டா விவசாயிகளை ஒன்றிணைத்து தீவிரமான போராட்டத்தில் களமிறங்குவோம் என்று எச்சரிக்கிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x