Published : 05 Aug 2023 07:03 AM
Last Updated : 05 Aug 2023 07:03 AM

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு - முதல்வர் ஸ்டாலின், கட்சித் தலைவர்கள் வரவேற்பு

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: நீதி வென்றது. வயநாடு ராகுல் காந்தியை தக்க வைத்துக் கொண்டது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கும் உச்சநீதிமன்றத்தின் முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இந்த உத்தரவு, நமது நீதித் துறையின் வலிமை மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையையும், மக்களாட்சியின் மாண்புகளைக் காப்பாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது. உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் தர்மம் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் மக்களின் குரலாக மக்களவையில் ராகுல் காந்தியின் குரல் மீண்டும் ஒலிக்கும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: சூரத் கீழமை நீதிமன்றம் ஏற்படுத்திய களங்கத்தை உச்ச நீதிமன்றம்துடைத்துத் தூய்மைப்படுத்தியுள்ளது. உத்தரவை வரவேற்பதுடன் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்படுவதைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கட்சிகளை முடக்கும் விதத்தில் ஜனநாயகத்தின் அனைத்து அம்சங்களையும் மத்திய பாஜக அரசு சீர்குலைக்கிறது. ஆனால், அந்த மமதைக்கு உச்ச நீதிமன்றம் அணைபோட்டுள்ளது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: உச்ச நீதிமன்றத்தின் தடை என்பது நல்ல தீர்ப்பு என்பது மட்டுமல்ல, நெரிக்கப்பட்ட இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவும் ஆகும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்: இத்தீர்ப்பு நீதித் துறையின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டோருக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

விசிக தலைவர் திருமாவளவன்: நீதித்துறை சனாதன வாதிகளின் தீங்கான செயல்திட்டங்களை அம்பலப்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்தின் மகத்தான வெற்றி.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x