Published : 05 Aug 2023 07:07 AM
Last Updated : 05 Aug 2023 07:07 AM

கட்டிடத்தின் பணிமுடிப்பு சான்றிதழ் இருந்தால் கட்டுமான ஒப்பந்தம் தேவையில்லை - பதிவுத் துறை உத்தரவு

சென்னை: கட்டிடத்தின் பணி முடிப்பு சான்றிதழ்இருந்தால் கட்டுமான ஒப்பந்தம் பதிவு தேவையில்லை என்றும், அதே நேரம் வீட்டின் முழு பரப்புக்குமான பதிவை கட்டாயமாக்கி பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளை பொறுத்தவரை, முதல் விற்பனை பதிவு என்றால்,வீடு வாங்குவோருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் பிரிக்கப்படாத பகுதிஅளவுக்கு மட்டுமே கிரைய பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கிரையப்பதிவுக்கு முன், கட்டுமான நிறுவனத்துக்கும், வீடு வாங்குபவருக்கும் இடையிலான கட்டுமான ஒப்பந்தத்தை பதிவு செய்யும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டது. அதன்பின் கடந்த 2020-ல் கட்டிடத்தின் பணி முடிப்புசான்றிதழ் இருந்தால், கட்டுமான ஒப்பந்தம் பதிவு செய்ய வேண்டியதில்லை. நேரடியாக கிரையம் பதிவுசெய்யலாம். அத்துடன், முதல் பதிவில் பிரிக்கப்படாத பகுதியை மட்டும் பதிவு செய்தால் போதுமானது.

சூப்பர் கட்டுமானப்பகுதி எனமுழுமைக்கும் பதிவு தேவையில்லை என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதே நேரம்,பணிமுடிப்பு சான்றிதழ் இல்லாதபட்சத்தில், கட்டுமான ஒப்பந்தம் பதிவுசெய்ய வேண்டியிருந்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பதிவுத்துறை தலைவர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், கட்டுமான நிறுவனங்கள் பணி முடிப்பு சான்றிதழ்பெற்றுவிட்டதாக கூறி, நேரடியாக கிரைய பத்திரம் பதிவு செய்வதாகவும், இதனால், அரசுக்கு இழப்பு ஏற்படுவதால், 2020-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதை ஏற்ற தமிழக அரசு, அத்திட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது. பணி முடிப்பு சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே கட்டுமான ஒப்பந்தம்பதிவு செய்யாமல் நேரடியாக கிரைய பத்திரம் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கட்டுமான ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதற்கான உத்தரவை பதிவுத்துறை செயலர்ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ளார். மேலும், முதல் பதிவாக இருந்தாலும், வீட்டின் பரப்பு முழுமைக்கும் பதிவு மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை மீண்டும் வந்துள் ளது.

இதுகுறித்து கட்டுமானத் துறையினரிடம் கேட்டபோது, ‘‘தமிழக அரசின் நடைமுறையால் வீடு வாங்குபவர்களுக்கும் லாபம்தான். பணி முடிப்பு சான்றிதழ் பெற்ற அதாவது உடனடியாக குடியேறும் நிலையில் உள்ள வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை. கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை வாங்கும்போது, ஜிஎஸ்டி கட்ட வேண்டும். முன்பெல்லாம் முதல் பதிவாக இருந்தால் பிரிக்கப்படாத பகுதியும், மறு விற்பனை மூலம் மறு பதிவாக இருந்தால் வீடு முழு பரப்புக்கும் கிரைய பத்திரம் பதிவு செய்ய வேண்டும்.

ஆனால், தற்போது முதல் பதிவாக இருந்தாலும் முழுமைக்கும் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் செலவு அதிகரித்தாலும் ஜிஎஸ்டி வாயிலாக 1.5 சதவீதம் வரைவாடிக்கையாளருக்கு கட்ட ணம் குறையும். கட்டுமான நிறுவனங் களுக்கு இந்த கணக்குகளை கையாள்வதும் எளிது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஆடிப்பெருக்கில் ரூ.99 கோடி வசூல்: ஆடிப்பெருக்கு நாளில் தமிழகம் முழுவதும் 14,449 பத்திரங்கள் பதியப்பட்டு, ரூ.99.63 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு தினத்தில் அதிகமானோர் பத்திரப்பதிவு செய்வார்கள் என்பதால் கடந்த 3-ம் தேதி கூடுதல் டோக்கன்களை வழங்க பதிவுத்துறை நடவடிக்கை எடுத்திருந்தது. அதன்படி, 150 டோக்கன்கள் வழங்கப்பட்டன. அன்று ஒரே நாளில் 14,449 பதிவுகள் மூலம், ரூ.99 கோடியே 62,70,184 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x