Published : 05 Aug 2023 07:11 AM
Last Updated : 05 Aug 2023 07:11 AM

திட்டங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வருவது முக்கியம் - அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுவது மிகவும்முக்கியம் என்று முன்னுரிமை திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னுரிமை திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திட்டங்கள் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், இதுபோன்ற ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறேன். களஆய்வுக்குச் செல்லும்போது சில இடங்களில் பணிகள் முழுமையாக முடியாத நிலை இருப்பதைக் கண்டேன். எனவே, வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.

திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து பார்வையிட அமைக்கப்பட்டுள்ள ‘டேஸ்போர்டில்’ தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று பணிகளின்முன்னேற்றம் குறித்த புகைப்படங்களையும் வாரந்தோறும் பதிவேற்றம் செய்யவேண்டும்.

ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டால், அது எவ்வளவு வேகமாக செயல்பாட்டுக்கு வருகிறது என்பதுதான் முக்கியம். எனவே, தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் துறை செயலர்கள் கலந்தாலோசித்து உடனுக்குடன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அறிவிக்கப்பட்ட திட்டம்தாமதமானால் அதற்கான மதிப்பீடுகள் அதிகரிக்கும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரிகளை அழைத்துப் பாராட்டுங்கள். அறிவித்த திட்டங்கள் அரசுஆணைகளாகி குறிப்பிட்ட காலத்துக்குள் பயன்பாட்டுக்கு வந்தால், அதுதான் நாம் நிர்வாக ரீதியாக நடத்திக் காட்டும் சாதனை. அந்தசாதனையை நிறைவேற்ற அரசுசெயலர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

முன்னுரிமைத் திட்டங்களை முழு மூச்சுடன் நிறைவேற்றி தமிழக மக்களுக்கு அத்திட்டங்களின் பயன்களை கொண்டுபோய்ச் சேர்த்திட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இக்கூட்டத்தில் குறிப்பாக, தமிழகத்தில் செப்.15-ம் தேதி தொடங்கப்பட உள்ள மிக முக்கியமான திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கமாக கேட்டறிந்த முதல்வர், திட்டம் தொடர்பான பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின், சு.முத்துசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x